PUBLISHED ON : ஜூன் 22, 2025

வடை, போண்டா, பஜ்ஜி என்று எண்ணெயில் பொரித்தெடுத்த பதார்த்தங்களை பெரும்பாலும் 'டிஷ்யூ' பேப்பரில் வைப்பது தான் வழக்கம். காரணம், அதில் உள்ள அதிகப்படியான எண்ணெயை டிஷ்யூ பேப்பர் உறிஞ்சிக் கொள்ளும். அதிக எண்ணெய் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடும் போதும், டிஷ்யூ பேப்பரில் வைத்து பிழிந்து எடுத்த பின் சாப்பிடும் பழக்கமும் நம்மில் பலருக்கும் உள்ளது.
உண்மையில் எண்ணெய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு எந்த அளவு ஆபத்து உள்ளது என்று நினைக்கிறோமோ, அதைவிட அதிகளவு ஆபத்து டிஷ்யூ பேப்பர் வாயிலாகவே வந்து சேரும்.
காரணம், டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் போது, ஒரு சில முக்கிய வேதிப் பொருட்கள் சேர்ப்பர்.
அதில், முதலாவது மெலமின். இது, டிஷ்யூ பேப்பரின் தன்மையை உபயோக தக்கதாக மாற்றும். அடுத்தது, ஈரத் தன்மையை கொண்டு வருவதற்கு பாலிமின் என்ற வேதிப் பொருள் சேர்க்கப்படும்.
அந்த ஈரப்பதத்தை சரியான விதத்தில் பராமரிப்பதற்காக யூரியா பார்மால்டிஹைடு என்ற பொருள் பயன்படுத்தப்படும்.
நான்காவது எபிகுளோரோஹைட்ரின். இது, டிஷ்யூ பேப்பருக்கு நல்ல வெண்மை நிறத்தையும், மென்மையையும் தரும். இந்த நான்கும் சிறுநீரக கற்கள், சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தும். ஏற்கனவே சுவாச பிரச்னைகள் உள்ளவர்கள், டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தும் போது, அதன் தீவிரத்தை அதிகப்படுத்தலாம்.
இது தவிர, டிஷ்யூ பேப்பர் தயாரிக்கும் போது, பி.எப்.ஏ.எஸ்., என்ற வேதிப் பொருளை பயன்படுத்துவர். இது, குழந்தையின்மை, கேன்சரை உண்டாக்கும்.
தினமும் டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக சுத்தமான பருத்தி துணிகளை பயன்படுத்தலாம்.
டாக்டர் ஆர். மைதிலி,
ஆயுர்வேத மருத்துவர், சென்னை99622 62988drmythiliayur@gmail.com

