PUBLISHED ON : ஜூன் 24, 2025 12:00 AM

பாமர மக்கள் தங்கள் கனவு மெய்ப்பட உள்ள ஒரு வழி அதிகாரத்தில் இருப்பவர்களை அணுகி மனு கொடுப்பதுதான்.
செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அடுத்த விளம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அமலா,34 இரண்டு மகள்கள் உள்ளனர்,தவிர்க்க இயலாத சூழ்நிலையில் குடும்ப பராத்தை சுமக்க வாடகைக்கு ஆட்டோ ஒட்டிவருகிறார்.
தினமும் காலை 7 மணிக்கு கிராமத்தில் இருந்து சென்னை கொட்டிவாக்கத்திற்கு பஸ்சில் வருவேன் அங்கு வாடகைக்கு ஆட்டோ எடுத்து நாள் முழுவதும் ஒட்டிவிட்டு இரவு 9 மணிக்கு மீண்டும் பஸ் பிடித்து வீட்டுக்கு திரும்பிவிடுவேன்.
சிரமம்தான் ஆனால் சுயமாக வாழவேண்டும் என்பது என் விருப்பம்,எனக்கு மட்டும் சொந்தமாக ஆட்டோ இருந்தால் இன்னும் நிறைய சம்பாதிப்பேன் மகள்களை நன்கு படிக்கவைப்பேன்.
இந்தக் கனவை சுமந்து கொண்டிருந்த எனக்கு கடந்த மகளிர் தினத்தின் போது சென்னை கவர்னர் மாளிகையில் கலந்து கொண்டு பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
எனது ஆதங்கத்தை பேசினேன்,பேசினேன் என்பதைவிட மனம்திறந்து கொட்டினேன்.
கவர்னருக்கு தமிழ் தெரியாது என்றனர் ஆனால் நான் சொல்வதை கூர்ந்து கவனித்தார்., சொந்த ஆட்டோ இருந்தால் நல்லது என்ற என் மனுவையும் கொடுத்தேன்.
இது நடந்து 3 மாதங்களுக்கு மேலாகிவிட்டது நான் அதிகாரத்தில் உள்ள பலருக்கு கொடுத்த மனுக்களின் கதிதான் கவர்னருக்கு கொடுத்த மனுவின் கதியும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
இந்த நிலையில் இன்று கவர்னர் மாளிகைக்கு மகள்களுடன் வரச்சொல்லி அழைப்பு வந்தது.
போனால் அங்கே எனக்கு எனக்கே என்று ஒரு புத்தம் புது ஆட்டோ நின்று கொண்டிருந்தது.
'இது என் விருப்ப நிதியில் இருந்து வாங்கிக் கொடுத்துள்ளேன் நல்லா இரும்மா', என்று ஆசீர்வாதித்து ஆட்டோவின் சாவியை வழங்கிய போது மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டேன், கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை, என் எதிரே கவர்னர் கடவுள் போல தெரிந்தார்.
காலில் விழாத குறையாக அவருக்கு நன்றி சொன்னேன், கவர்னர் மாளிகை வளாகத்திற்குள் புது ஆட்டோவை நான் ஓட்ட, மகள்களுடன் உட்கார்ந்து சிறிது துாரம் பயணித்து மகிழ்ந்து எங்களை மகிழ்வித்தார்.
கனவு மெய்ப்பட்ட மகிழ்வில் அமலாவின் கண்களில் ஆனந்த கண்ணீர்.
-எல்.முருகராஜ்