தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பொக்கிஷம்/டைனோசர்களின் மாஸ் ரீ-என்ட்ரி

டைனோசர்களின் மாஸ் ரீ-என்ட்ரி

டைனோசர்களின் மாஸ் ரீ-என்ட்ரி


PUBLISHED ON : ஜூலை 16, 2026 05:27 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2026 05:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூமியிலிருந்து டைனோசர்கள் அழிந்து கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன என்று அறிவியல் கூறலாம், ஆனால் மனிதர்கள் இருக்கும் வரை அவற்றை அவ்வளவு சீக்கிரம் மறக்கவிட மாட்டார்கள் போல! அதற்கு ஆகச்சிறந்த சான்றுதான் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள எமரால்டு டவுன்ஸ் குதிரைப் பந்தய மைதானத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் நடக்கும் இந்த வினோதத் திருவிழா.

வழக்கமாக கம்பீரமான குதிரைகள் பாய்ந்து ஓடும் அந்த டிராக்கில், குதிரைகளுக்குப் பதிலாக ராட்சத டைனோசர்கள் தட்டுத்தடுமாறி, குபீர் சிரிப்பு மூட்டும் வகையில் ஓடுவதுதான் இந்த போட்டியின் அல்டிமேட் ஹைலைட்.Image 1599529இதன் பின்னணியைப் பார்த்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். 2017-ஆம் ஆண்டு ஒரு தனியார் பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனம், தங்களது ஊழியர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களுக்குள் ஒரு நல்ல சுமுக உறவை ஏற்படுத்தவும் சும்மா ஜாலியாக ஒரு ஓட்டப் பந்தயத்தை நடத்தியது. ஆனால், காற்றடைத்த டைனோசர் உடைகளை மாட்டிக்கொண்டு அவர்கள் ஓடிய ஓட்டம் இணையதளத்தில் காட்டுத்தீயாய் பரவி, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. விளைவு? இன்று அது 'டி-ரெக்ஸ் உலக சாம்பியன்ஷிப்' என்ற பிரம்மாண்ட சர்வதேசப் போட்டியாகவே உருவெடுத்துவிட்டது.Image 1599530இந்தப் போட்டியில் பங்கேற்க சில கண்டிப்பான, அதே சமயம் வேடிக்கையான விதிகளும் உள்ளன. ஓடப்போகும் நபர்கள் அனைவரும் காந்தக் காற்றடைக்கப்பட்ட மாபெரும் டி-ரெக்ஸ் டைனோசர் உடைகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ஓடும்போது காற்று இறங்கி டைனோசர் 'பஞ்சர்' ஆகிவிடக் கூடாது என்பதால், பேட்டரி மூலம் தொடர்ந்து அந்த உடைகளுக்குள் காற்று நிரப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். பார்ப்பதற்கு ஏதோ டைனோசர்கள் எல்லாம் உயிருடன் வந்து மைதானத்தில் நிற்பது போல அச்சு அசலாக இருக்கும்.Image 1599531குதிரைப் பந்தய டிராக்கின் நேர்க்கோட்டுப் பகுதியில் சுமார் 100 யார்டு, அதாவது தொண்ணூற்று ஒன்று புள்ளி நான்கு மீட்டர் தூரத்தை நோக்கி இந்த டைனோசர்கள் ஓட வேண்டும். பந்தயத்தில் பாரபட்சம் இருக்கக் கூடாது என்பதற்காக, 16 வயதுக்குட்பட்ட சுட்டிக் குழந்தைகள், துள்ளலான இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட 'டைனோ தாத்தா-பாட்டிகள்' என வயது மற்றும் பாலின அடிப்படையில் தனித்தனி பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலகெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் இந்த விசித்திரப் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் குவிகிறார்கள்.Image 1599532மைதானம் முழுவதும் திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கைதட்டி, வயிறு குலுங்கச் சிரித்து ஆரவாரம் செய்ய, பந்தயம் தொடங்கும். அந்த குட்டி கைகளையும், பெரிய தலையையும் வைத்துக் கொண்டு டைனோசர்கள் ஓடும் அழகைப் பார்ப்பதே ஒரு தனி சுகம் தான்! பல நேரங்களில் யார் முதலில் கோட்டைத் தொட்டது என்று கண்டுபிடிப்பதே நடுவர்களுக்குப் பெரும் சவாலாக மாறிவிடும். அதனால், நிஜக் குதிரைப் பந்தயங்களைப் போலவே இங்கேயும் அதிநவீன 'போட்டோ ஃபினிஷ்' கேமராக்கள் மூலம் துல்லியமாகக் கணிக்கப்பட்டுதான் வெற்றியாளர்கள் மாஸாகத் தேர்வு செய்யப்படுகின்றனர்.Image 1599533இந்தத் திருவிழா எந்த அளவுக்குப் பிரபலமடைந்துள்ளது என்றால், உலகப் புகழ்பெற்ற விளையாட்டு ஊடகமான ESPN தொலைக்காட்சியிலேயே இது நேரலையாக ஒளிபரப்பப்பட்டு உலக மக்களை மகிழ்வித்து வருகிறது. டைனோசர்கள் மீண்டும் பூமிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை, இவ்வளவு வேடிக்கையாகவும் கொண்டாட்டமாகவும் மாற்றிய பெருமை இந்த எமரால்டு டவுன்ஸ் பந்தயத்தையே சேரும்.Image 1599534----எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us