தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்


சினிமா



/வாராவாரம்/தலையங்கம்/ தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்


PUBLISHED ON : ஜூன் 15, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2026 12:00 AM


Favourite on Google
அ நிறம் | அளவு

திரிணமுல் காங்கிரசில் பிளவு

மம்தா மீண்டு வருவாரா?

––––––––––––

மேற்கு வங்க மாநிலத்தில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது; பா.ஜ., ஆட்சியை பிடித்தது.

இந்த தோல்விக்கு பிறகு, திரிணமுல் காங்கிரசில் உட்கட்சி பூசல் தீவிரமாகியுள்ளது. மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜியின் தலைமைக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

மொத்தமுள்ள திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள், 80 பேரில், 60 பேர், மம்தாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., ரிதபிரதா பானர்ஜியை, எதிர்க்கட்சி தலைவராக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல, மம்தா கட்சியின் லோக்சபா எம்.பி.,க்கள், 28 பேரில், 20 பேர் தனி அணியாக பார்லிமென்டில் செயல்பட தீர்மானித்துள்ளனர். இவர்கள், மத்திய பா.ஜ., அரசுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்க சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, 294. இவற்றில், வெறும் மூன்று இடங்களுடன் பலவீனமான எதிர்க்கட்சியாக ஒரு காலத்தில் இருந்த பா.ஜ., சமீபத்திய தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. அதே சூட்டுடன், எதிர்க்கட்சியான திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர்களையும், தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வர முற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடே திரிணமுல் கட்சியில் நிலவும் பூசல்.

மேற்கு வங்கத்தில் மம்தா அரசு பதவியில் இருந்தபோதே, அவரது கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கு எதிராக, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் சோதனை, கைது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தன.

அப்படிப்பட்ட சூழலில், தற்போது மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ள பா.ஜ., திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு எதிராக மீண்டும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கலாம் என்பதால், அவர்கள் மம்தாவுக்கு எதிராகவும், பா.ஜ.,வுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த, 2021- சட்டசபை தேர்தலின் போது, ஆளும் கட்சியாக இருந்த திரிணமுல் காங்கிரசாரின் கண்மூடித்தனமான தாக்குதல்களால், எதிர்க்கட்சியினர், -குறிப்பாக, பா.ஜ., தொண்டர்கள் -ஏராளமானோர் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறி, அண்டை மாநிலங்களுக்கு செல்ல நேரிட்டது.

அப்போது நடைபெற்றது போன்ற வன்முறை சம்பவங்கள் தற்போது நிகழவில்லை என்றாலும், பா.ஜ.,வினர் தங்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்பதால், திரிணமுல் கட்சியினர் அணி மாறி வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, குடும்ப அரசியல் மற்றும் கட்சியின் நலனை விட தன் மருமகனான அபிஷேக் பானர்ஜிக்கு மம்தா பானர்ஜி முக்கியத்துவம் அளிப்பதும், உட்கட்சி பூசல் அதிகரிக்க காரணமாகி உள்ளது.

காங்கிரசில் இருந்தபோது, அதிரடி செயல்பாடுகள் மூலம் தனி முத்திரை பதித்த மம்தா, தன் பங்களிப்பிற்கு ஏற்ற பொறுப்புகளையோ, அங்கீகாரத்தையோ காங்கிரஸ் வழங்கவில்லை என்று கூறியே, திரிணமுல் காங்கிரசை துவக்கினார். அந்த காலகட்டத்தில், அவரது நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் சுவேந்து அதிகாரி.

தனக்கான முக்கியத்துவத்தை குறைத்து, மருமகனுக்கு மம்தா முக்கியத்துவம் அளித்ததை எதிர்த்து தான், சுவேந்து அதிகாரி திரிணமுல் கட்சியில் இருந்து வெளியேறி, பா.ஜ.,வில் சேர்ந்தார். தற்போது அக்கட்சி சார்பில் முதல்வராகி உள்ளார்.

சுவேந்து அதிகாரி போலவே, திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் ஏராளமானோர், மம்தாவால் ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்தனர். அந்தக் கோபத்தையே மம்தாவுக்கு எதிராக தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர். அதுவே, கட்சியின் பிளவுக்கு காரணம்.

இந்த தருணத்தில், காங்கிரசுடன் திரிணமுல் காங்., இணையலாம் என்ற செய்திகள் பரவி வருகின்றன. அது நடந்தால் மம்தாவுக்கு சாதகமாக இருக்கும் என்பதுடன், முதல்வர் சுவேந்து அதிகாரியால் உருவாகும் பிரச்னைகளையும், சவால்களையும் சந்திக்க உதவலாம். எது எப்படியோ, திரிணமுல் கட்சியில் ஏற்பட்ட பிளவு, மம்தாவுக்கு மிகப்பெரிய பின்னடைவே. இதிலிருந்து, மம்தா மீண்டு வருவாரா என்பதை எதிர்காலம் தான் தீர்மானிக்கும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us