சண்டிகர் மேயர் தேர்தல் தீர்ப்பு: கட்சிகளுக்கு சரியான பாடம்
சண்டிகர் மேயர் தேர்தல் தீர்ப்பு: கட்சிகளுக்கு சரியான பாடம்
PUBLISHED ON : பிப் 26, 2024 12:00 AM
சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் குல்தீப் குமாரும், பா.ஜ., சார்பில் மனோஜ் சோன்கரும் போட்டியிட்டனர். இந்த மேயர் தேர்தலில் மொத்தம், 36 கவுன்சிலர்கள் ஓட்டளித்தனர். பா.ஜ.,வுக்கு 16 ஓட்டுகள் கிடைத்தன; 'இண்டியா' கூட்டணி ஆதரவு பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளருக்கு, 20 ஓட்டுகள் கிடைத்தன.
இருப்பினும், ஆம் ஆத்மி வேட்பாளருக்கு கிடைத்த ஓட்டுகளில் எட்டு செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதனால், பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
தேர்தல் அதிகாரியின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் சட்டத்தின், 142வது பிரிவின் கீழ் வழங்கப் பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பா.ஜ., வேட்பாளரின் வெற்றி செல்லாது என்று அறிவித்ததுடன், ஆம் ஆத்மியின் குல்தீப் குமாரே வெற்றி வேட்பாளர் என்றும் தெரிவித்தது.
அதே நேரத்தில், தேர்தல் அதிகாரி அனில் மாஷி, சட்டத்திற்கு முரணாக செயல்பட்டுள்ளதால், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக விழுந்த எட்டு ஓட்டுகளை செல்லாத ஓட்டுகள் எனக் கூறி, தேர்தல் அதிகாரி அவற்றை எண்ணாமல் விட்டதால் தான், பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்க நேரிட்டுள்ளது. இதன் வாயிலாக, ஒரு கட்சிக்கு ஆதரவாக, தேர்தல் அதிகாரி செயல்பட்டுள்ளார் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.
அத்துடன், இதுபோன்ற வழக்கில், தேர்தல் ஜனநாயக நடைமுறைகள், சூழ்ச்சிகள் காரணமாக முறியடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை என்றும், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் வலியுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மற்றும் தலையீடு வாயிலாக, சண்டிகர் மேயர் தேர்தலில் நடைபெற்ற ஒரு பெரிய தவறு முறியடிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், தீர்ப்பானது மத்தியில் ஆளும் பா.ஜ., கட்சிக்கு தோல்வியை பரிசாக தந்துள்ளதுடன், பெரும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்திஉள்ளது.
பா.ஜ.,வுக்கு எதிராக அமைக்கப்பட்ட, காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டியா' கூட்டணியில், தற்போது ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. தேர்தல் வரை அந்த அணி கரை சேருமா என்ற சூழ்நிலை நிலவி வந்தது. இந்தத் தருணத்தில், ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியத்தை கோடிட்டு காட்டியுள்ளது.
அதுமட்டுமின்றி, தேர்தல் என்பது ஜனநாயக நடைமுறை. அந்த நடைமுறையில், அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும், தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து மட்டத்தில் உள்ள அதிகாரிகளும், நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதையும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சண்டிகர் மேயர் தேர்தல் என்பது, உள்ளாட்சி அளவிலான தேர்தல். லோக்சபா தேர்தலோடு ஒப்பிடுகையில் மிகவும் சிறியது. ஆனால், அந்தத் தேர்தலில் நடந்த முறைகேடுகள், தேசிய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. அத்துடன், இந்தப் பிரச்னையை ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவில் எடுத்துச் சென்று, இண்டியா கூட்டணிக்கு வலு சேர்த்துள்ளது.
இந்த தேர்தலில் நடந்த முறைகேடு விரும்பத்தகாத விஷயமாகும். வரும் காலங்களில், இதுபோன்று தேர்தலில் முறைகேடுகள் நடந்தால், நியாயமற்ற வழிகளை அரசியல் கட்சிகள் பின்பற்றினால், அதற்கு தக்க பதிலடி கிடைக்கும்; தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்பதை நினைவூட்டும் விதமாக, சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கின் தீர்ப்பு அமைந்துள்ளது.
எந்த ஒரு தேர்தலும் சுதந்திரமாகவும், நேர்மை யாகவும் நடைபெற வேண்டும். அதில், எந்த மட்டத்திலும் சமரசத்திற்கு இடம் தரக்கூடாது என்பதை, அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

