தேர்தல் பத்திரம் திட்டம் மத்திய அரசுக்கு பின்னடைவு
தேர்தல் பத்திரம் திட்டம் மத்திய அரசுக்கு பின்னடைவு
PUBLISHED ON : பிப் 19, 2024 12:00 AM
'அரசியல் கட்சிகள், ஒருவரிடம் இருந்து, 20,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை பெற்றால், அதன் முழு விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்' என, அரசியல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 2017ல், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இதுதொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்தது. தேர்தல் பத்திரம் திட்டத்தையும் அறிமுகம் செய்தது.
கடந்த, 2018ல் அமலுக்கு வந்த, அந்த தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அதில், 'தேர்தல் பத்திரம் திட்டம், இந்திய அரசியல் சட்டத்திற்கும், பொதுமக்களின் தகவல் அறியும் உரிமை மற்றம் தனி நபர் சுதந்திரத்திற்கும் எதிரானது. இந்த திட்டத்திற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், கம்பெனிகள் சட்டம் மற்றும் வருமான வரி சட்டத்தில் செய்த திருத்தங்கள் செல்லாது' எனவும், தெரிவித்தது.
அத்துடன், தேர்தல் பத்திரம் திட்டத்தை செயல்படுத்தி வரும் ஸ்டேட் பாங்க், உடனடியாக அதன் விற்பனையை நிறுத்த வேண்டும். இதுவரை தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்களின் முழு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்; பத்திரங்கள் வாங்க அவர்கள் செலுத்திய பணம், எந்தெந்த கட்சிகளுக்கு சென்றது என்ற விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.அரசியல் கட்சிகளுக்கு தனி நபர்களும், நிறுவனங்களும் நேரடியாக பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் தான், தேர்தல் பத்திரம் திட்டத்தை மோடி அரசு அறிமுகப்படுத்தியது.
'இந்த திட்டம் வாயிலாக, அரசியல் கட்சிகளுக்கு பணம் தரும் முறையில் முறைகேடுகள் நடப்பது தவிர்க்கப்படும். வெளிப்படையான அணுகுமுறை பின்பற்றப்படும்' என, திட்டத்தை அறிமுகப்படுத்திய நேரத்தில், மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி கூறினார். ஆனாலும், திட்டமானது ஆளும் கட்சிக்கு சாதகமாகவும், எதிர்க்கட்சிகளுக்கு பாதகமாகவும் உள்ளதாக குற்றச்சாட்டு தொடர்ந்தது.
அத்துடன் அரசியல் கட்சிகளுக்கு நிதி தரும் வகையில், தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டதும், திட்டத்தின் வெளிப்படைத்தன்மை விஷயத்தில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், இந்த விவகாரத்தில், எந்த விதமான கருத்தும் தெரிவிக்காமல், தேர்தல் ஆணையமும் மவுனம் காத்து வந்தது.
அதனால், தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2019 ஏப்ரலில் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், எந்தெந்த கட்சி எவ்வளவு நன்கொடை பெற்றது என்ற விபரத்தை திரட்டாமல் இருந்ததற்காக, தேர்தல் ஆணையத்திற்கு கடும் கண்டனமும் தெரிவித்தது.
தேர்தல் பத்திரம் திட்டம் தற்போது ரத்தாகி உள்ளதால், தேர்தல் நிதி விவகாரம், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் விஷயத்தில், வரும் காலங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அப்போது தான், தேர்தல் அரசியலில் பணமானது நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்கப்படும்; நாட்டின் ஜனநாயகமும் மேம்படும்.
தேர்தல் பத்திரம் திட்டம் விவகாரத்தில், மத்திய அரசு பின்னடைவை சந்தித்ததற்கு, மற்ற அரசியல் கட்சிகளுடன், பொதுமக்களுடன் கலந்து ஆலோசிக்காமல், அவர்களின் கருத்துக்களைப் பெறாமல் திட்டத்தை அமல்படுத்தியதே முக்கிய காரணமாகும். இனியும், இப்படிப்பட்ட பின்னடைவைசந்திக்காமல் இருக்க, அரசியல் கட்சிகள் நிதி பெறும் விவகாரத்தில் சரியான தீர்வை கண்டுபிடிக்க, கடந்த கால தவறுகளை களைய வேண்டும்.
எந்த விதமான குற்றச்சாட்டுகளுக்கும்இடமளிக்காத வகையில், சரியான கட்டுப்பாடுகளுடன் முறையான சீர்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம்.

