தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/தலையங்கம்/அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம்: தடைகள், சிக்கல்கள் ஏராளம்!

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம்: தடைகள், சிக்கல்கள் ஏராளம்!

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம்: தடைகள், சிக்கல்கள் ஏராளம்!

3


PUBLISHED ON : ஜூன் 22, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

3

PUBLISHED ON : ஜூன் 22, 2026 05:13 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்., 28-ம் தேதி தாக்குதலை துவங்கின. அதனால், அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. அத்துடன், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடியது. ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்பொல்லா தீவிரவாதிகளும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வர, நம் அண்டை நாடான பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட துவங்கியது. அந்த முயற்சியின் பலனாக, சமீபத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, அடுத்த, 60 நாட்களுக்குள் ஈரானும், அமெரிக்காவும் இறுதிக் கட்ட பேச்சு நடத்தி, போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக சுவிட்சர்லாந்து நாட்டில் இருதரப்பும் பேச்சு நடத்த திட்டமிட்டிருந்தன.

ஆனால், இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு ஹிஸ்பொல்லா தீவிரவாதிகளுக்கும் இடையேயான சண்டை முடிவுக்கு வராததால், நான்கு மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட, ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடியது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.

'போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, அமெரிக்கா அளித்த உறுதிமொழிகள் மீறப்பட்டுள்ளன. அமைதி ஒப்பந்தத்தை மீறி, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற மறுப்பதால், கப்பல் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடப்படுகிறது' என, ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தப்படி, லெபனான் உட்பட எந்தப் பகுதியிலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தக்கூடாது. அனைத்து வகையான தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என்பதாகும். அதை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது, நம்பிக்கை துரோகம் என்றும் ஈரான் அரசு விமர்சித்துள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் எதுவும் செல்லக்கூடாது. அதை மீறிச்சென்றால், அந்த கப்பல்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்றும் எச்சரித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதால், கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு பற்றாக்குறையால் அவதிப்பட்டு வந்த உலக நாடுகள் நிம்மதி அடைந்தன. அந்த நிம்மதிக்கு தற்போது சிக்கல் உருவாகியுள்ளது. இருப்பினும், இரு நாடுகளும் அமைதி பேச்சை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஈரான் மீதான போரால் அமெரிக்காவுக்கும் ஏராளமான பொருட்செலவு ஏற்பட்டுள்ளதையும், உள்நாட்டிலேயே போருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதையும் அதிபர் டிரம்ப் உணர வேண்டும்.

அதுமட்டுமின்றி, போரால் சீர்குலைந்துள்ள ஈரானின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த நிதியுதவியும் வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் இரு நாடுகளும் சற்றே விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும். மேலும், அமைதி ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வருவதற்கு, இஸ்ரேல் நாடு முக்கிய பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, லெபனானின் தென்பகுதியில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும். அத்துடன் ஹிஸ்பொல்லா மீதான தாக்குதலையும் நிறுத்த வேண்டும்.

அதைச் செய்யும்படி இஸ்ரேல் நாட்டிற்கு அதிபர் டிரம்ப் நிர்பந்தம் தர வேண்டும். ஏனெனில், இஸ்ரேலும், அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகளாகும்.

அதேநேரத்தில், ஈரான் தன் வசமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அழிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனையை நிறைவேற்ற முன்வர வேண்டும். இப்படி பல நிபந்தனைகளை இரு தரப்பும் நிறைவேற்ற முன்வந்தால் மட்டுமே அமைதி ஒப்பந்தம் என்பது செயல்பாட்டுக்கு வரும். இல்லையெனில், அது பெயரளவில் தான் இருக்கும். மோதல்களும், அதனால் ஏற்படும் சேதங்களும், உலக நாடுகள் சந்திக்கும் பிரச்னைகளும் தொடரும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us