/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
அமெரிக்காவில் தமிழ் வளர்க்கும் பள்ளி
/
அமெரிக்காவில் தமிழ் வளர்க்கும் பள்ளி

'எங்கும் தமிழ்', 'எதிலும் தமிழ்' என்று நாம் முழக்கங்களுடன் நின்றுகொண்டிருக்க, ஆங்கிலம் மட்டுமே கோலோச்சும் அமெரிக்காவில் தனித்துவமாக தமிழ் வளர்த்து தடம் பதித்துக் கொண்டிருக்கிறது ஒரு பள்ளி. அது... அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் அருகே உள்ள இயற்கை எழில் சூழ்ந்த உட்லண்ட்ஸ் நகரத்தில் செயல்பட்டுவரும் 'உட்லண்ட்ஸ் தமிழ் பள்ளி'
அமெரிக்காவில் வாழும் தமிழர்களை மட்டுமல்லாது, அமெரிக்கர்களையும் திரும்பிப் பார்க்கவைக்கும் வகையில் இந்தப் பள்ளியில் என்னதான் செய்கிறீர்கள் என்று அப்பள்ளியின் முதல்வரும், திருவாரூரைச் சேர்ந்தவருமான பிரேம்குமார் ஆனந்தகிருஷ்ணனிடம் கேட்டோம்.
''1995 - 2000 காலகட்டத்தில் கல்வி மற்றும் பணி நிமித்தமாக, கடல் கடந்து அமெரிக்கா வந்தாலும், எங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் உட்லண்ட்ஸ் தமிழ் பள்ளி. 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இந்தப் பள்ளி, அடுத்த தலைமுறைக்கு தாய்மொழியை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு, முழுவதும் தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது'' என்ற அறிமுகத்துடன் பேசத் தொடங்கினார் பிரேம்குமார்.
''ஹூஸ்டன் தமிழ் பள்ளியின் 6 கிளைப் பள்ளிகளில் ஒன்று தான் எங்களின் உட்லண்ட்ஸ் தமிழ் பள்ளி. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹூஸ்டன் பள்ளியின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கிறார்கள். எங்கள் பள்ளியில் 80 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம், எங்கள் பள்ளியின் செயல்பாடுகள் தான்'' என்றவர், அதுபற்றி சொல்லத் தொடங்கினார்.
''அமெரிக்காவில் பிரபலமான 'ஸ்பெல்லிங் பீ' என்ற போட்டியைப் போல, ஹூஸ்டன் தமிழ் பள்ளியில் 'தமிழ் தேனீ' என்ற போட்டியை நடத்தினர். அதில், எங்கள் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, பரிசுகளை அள்ளினார்கள். இந்த போட்டி, அவர்களுக்கு புதிய தமிழ் வார்த்தைகள் கற்றுக்கொள்ள பயனுள்ளதாகவும் இருந்தது. அடுத்ததாக திருக்குறள் திருவிழாவில், ஒரு குறள் கூறி, அதன் பொருள் கூறினால் ஒரு டாலர் பரிசு. இதிலும் எங்கள் மாணவர்கள், 620 திருக்குறள்கள் சொல்லி, டாலர்களை பரிசாக அள்ளினர்.
முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, இப்போதைய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உதவி செய்யும் வகையில் குழுவாக செயல்படுகிறார்கள். அவர்களை பாராட்டும் விதமாக, ஒரு விழா எடுத்தோம். அவர்களுக்கு புதிய பதவிகள் கொடுத்து கவுரவித்தோம். மாணவர்கள் கல்லூரி படிப்புக்குச் செல்லும் போது, அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் வகையில், தமிழ் புதிய பாடத்திட்டம் சார்ந்த பயிற்சிகளும், கூட்டங்களும் நடத்தியிருக்கிறோம்'' என்றவர், மாணவர்கள் மட்டுமல்லாது, அவர்கள் குடும்பத்தினரையும் ஒருங்கிணைக்கும் செயல்களை செய்வதாகவும் குறிப்பிட்டார்.
''தமிழ் குடும்பங்கள் அனைவரும் பங்கு பெற்ற பொங்கல் திருவிழா, சுற்றுலா, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பங்குபெற்ற கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், கூட்டாஞ்சோறு, தமிழ் வார்த்தை விளையாட்டு, உறியடி என தமிழ் பாரம்பரியத்தை நினைவூட்டும் பல விழாக்கள் நடத்தியிருக்கிறோம். முதன்முறையாக மேல்நிலை மாணவர்களது பட்டமளிப்பு விழாவையும் நடத்தினோம்.
முத்தாய்ப்பாக, இந்த ஆண்டு ஹூஸ்டன் தமிழ் பள்ளியின் ஆண்டுவிழாவை, உட்லண்ட்ஸ் பள்ளியில் மிகச்சிறப்பாக நடத்தினோம். சுகர்லேண்ட், கேட்டி, மேற்கு ஹூஸ்டன், மேற்கு கேட்டி, உட்லண்ட்ஸ், பியர்லேண்ட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 575 மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள். எந்த நிகழ்ச்சியானாலும் மாணவர்களின் பெற்றோர்களும் உதவினார்கள். அவர்களது பங்களிப்பு இல்லையென்றால், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது சாத்தியமில்லை'' என்று சொல்லி முடித்தார் பிரேம்குமார்.
அந்நிய தேசத்தில் நம் செம்மொழி வளர்க்கும் பள்ளிக்கு பாராட்டுக்கள்.