/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
கனடாவின் மிக இள வயது செஸ் வீரர் இந்தியாவைச் சேர்ந்த ஆரோன்
/
கனடாவின் மிக இள வயது செஸ் வீரர் இந்தியாவைச் சேர்ந்த ஆரோன்
கனடாவின் மிக இள வயது செஸ் வீரர் இந்தியாவைச் சேர்ந்த ஆரோன்
கனடாவின் மிக இள வயது செஸ் வீரர் இந்தியாவைச் சேர்ந்த ஆரோன்
ஜன 22, 2025

2024ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டிற்கு மிகவும் பிடித்த நாடு 'இந்தியா' என்றால் அது மிகையாகாது. பதினெட்டு வயது 'கிராண்ட்மாஸ்டர்' குகேஷ் உலகளவில் மிக இள வயது சதுரங்க சாம்பியன் என்ற சாதனையை புரிந்தார். இந்தியாவின் சதுரங்க வீராங்கனைகள் கொனெரு ஹம்பி, ஆர்.வைஷாலி மற்றும் சதுரங்க வீரர் அர்ஜூன் எரிகைசி உலகளவில் நடத்தப்படும் ஒலிம்பியாட் சதுரங்க போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்றனர். இதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்களும் சதுரங்க போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகின்றனர்.
கிழக்கு கனடாவின் ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகா பகுதியில் வசித்து வரும் 12 வயது இந்தியச் சிறுவன் ஆரோன் ரீவ் மெண்டெஸ். சமீபத்தில் கனடாவின் மிக இளவயது 'இண்டர்நேஷனல் மாஸ்டர்' (ஐஎம்) என்ற பட்டத்தை அதிகாரபூர்வமாக பெற்று, உலக சாதனை படைத்துள்ளார்.
5 வயதில் இருந்தே...
இந்தியாவின் மங்களூரு நகரில் பிறந்த ஆரோன் தன் ஐந்தாம் வயதிலேயே சதுரங்க காய்களை தன் நெருங்கிய தோழர்களாக்கி கொண்டார். தன் எட்டாவது வயதில் குடும்பத்துடன் ஆரோன் கனடாவிற்கு குடிபெயர்ந்தார். 'கனடியன் ஓபன்' சதுரங்க போட்டியில் ரஸ்வான் ப்ரெத்தோ என்னும் வீரரை தோற்கடித்து, ஒரு கிராண்ட்மாஸ்டரை தோற்கடிக்கும் மிக இளவயது கனடியன் வீரர் என்னும் புகழைப் பெற்றார். அப்போது ஆரோனுக்கு வயது ஒன்பது.
2022ல் பனாமாவில் நடந்த உலக சதுரங்க போட்டியில் 37 நாடுகளின் சதுரங்க வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் ஆரோன் தங்கப் பதக்கத்தை வென்றார். 2022ல் நடந்த கனடியன் ஓபன் சதுரங்கப் போட்டியிலும் வெற்றி வாகையை சூடினார்.
கடந்த வருடம் டிசம்பர் 18 முதல் 23 வரை, வெர்ஜினியாவில் நடந்த வடஅமெரிக்க இளவயது சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றார். பதினெட்டு வயதிற்கு கீழுள்ள வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இதுவே இவருக்கு 'இண்டர்நேஷனல் மாஸ்டர்' என்னும் பெருமைமிகு பட்டத்தை பெற்றுத் தந்துள்ளது. உலகளவில் இரண்டாவது இளவயது 'ஐஎம்' ஆரோன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன் அனைத்து வெற்றிகளுக்கும் முழு ஆதரவு தருவது தன் பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் கனடியன் சதுரங்க அமைப்பு என்கிறார் ஆரோன்.
பயிற்சியாளரையே தோற்கடித்தவர்
“செஸ் பயின்ற முதல் ஆறு மாதங்களிலேயே தன் முதல் பயிற்சியாளரை, என் மகன் தோற்கடித்த தருணத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது.” என தன் மகனின் வளர்ச்சியை பெருமையுடன் நினைவு கூர்கிறார் ஜெனிஃபர் மெண்டெஸ்.
“சவால்களை சந்திப்பது ஆரோனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. தன் இலக்கை அடைய ஓயாமல் உழைத்து வருகிறான். அவனின் இந்த கடின உழைப்பும், விடாமுயற்சியும்தான் அவன் தொடர்ந்து வெற்றிபெற உறுதுணையாக உள்ளன. சிறு வயதில் நண்பர்களுடன் செஸ் பயிற்சிக்கு ஆரோன் ஆவலுடன் செல்வான். ஆனால் இப்போது அடுத்தடுத்த போட்டிகளுக்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபடுவதால், தன் நண்பர்களுடன் விளையாடக்கூட அவனுக்கு நேரமில்லை. நானும் என் கணவரும் முடிந்த அளவு ஆரோனுக்கு உறுதுணையாக உள்ளோம். அவனை மகனாக பெற்றதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.” என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் ஜெனிஃபர்.
ஆரோனின் இளவயது சதுரங்க திறமைக்கு அஸ்திவாரமாக விளங்கிய பள்ளி, மெங்களூரைச் சேர்ந்த டெர்ரிக் சதுரங்க பள்ளி. ஆரோனின் தற்போதைய பயிற்சியாளர்கள் சதுரங்க கிராண்ட்மாஸ்டர்கள் ஜி.ஏ.ஸ்டானி மற்றும் அர்ஜுன் கல்யாண்.
உலகளவில் பல சாதனைகளை படைத்து வரும் ஆரோன், சதுரங்க உலகில் மற்றும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். வருங்காலத்தில் சதுரங்க கிராண்ட்மாஸ்டராக அவர் வெற்றி பெற வாழ்த்துவோம். -
- நமது செய்தியாளர் ஸ்வர்ண ரம்யா