/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
மாலை நேரத்தை மந்திரமாலையாக மாற்றிய குருச்சரண்
/
மாலை நேரத்தை மந்திரமாலையாக மாற்றிய குருச்சரண்
மார் 30, 2025

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய இசை வடிவை, தமிழர்களின் மரபு வழியான இசை செல்வத்தை, கேட்கும் உயிர்கள் எல்லாம் இசைய வைக்கும் இன்பக்கலையை அரங்கம் முழுவதும் படர வைத்து அன்றைய மாலை நேரத்தை மந்திரமாலையாக மாற்ற வல்லது குருச்சரணின் குரல்.
கலைமாமணி சிக்கல் சி.குருச்சரண் இந்தியாவின் முன்னணி இளம் கர்நாடக இசைக் கலைஞர்களுள் ஒருவர். இவர் சர்வதேசப் புகழ் பெற்ற புல்லாங்குழல் கலைஞர்களான சிக்கல் சகோதரிகளில் மூத்தவரான சிக்கல் குஞ்சுமணியின் பேரன். இசைக்கலைஞர், இசையமைப்பாளர், நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகத் திறன் கொண்ட இவர் 'கிராமி' (Grammy) விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்.
கலிபோர்னியா டேவிஸ் பல்கலைக் கழகத்தில் புல்பிரைட்அறிஞராக (Fulbright Scholar) அறியப்படுகிறார். 37 இசைத் தொகுப்புகளையும் (ஆல்பங்கள்) தயாரித்துள்ளார். இவர் தன் கலைப்பயணத்தில் 'உஸ்தாத் பிஸ்மில்லாகான் யுவபுரஸ்கார்' (Ustad Bismillah Khan Yuva Puraskar Award) விருது, மற்றும் தமிழ்நாடு மாநில விருதான 'கலைமாமணி' விருது (இசைக் கலைஞர்களுக்கான மாநில உயரிய குடியியல் விருது) உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற பல்வேறு இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி, பாரம்பரிய தமிழிசைக் கலையை உலகம் முழுதும் கொண்டு சேர்க்கும் மாபெரும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இந்தியாவின் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான இசைக்கல்வி முன்னெடுப்பு முயற்சியில் ராப்சோடியின் (Rhapsody) அறங்காவலர் குழுவிலும் இடம் பெற்று இசை ஆசிரியராக மிளிர்கிறார்.
இளையோர் இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சார மேம்பாட்டு சங்கத்தின் (Society for the Promotion of Indian Classical Music and Culture Amongst Youth - SPICMACAY) குழுமக் கலைஞராக இணைந்து இந்தியா மற்றும் அமெரிக்கா முழுவதும் பல்வேறு பயிற்சிப் பட்டறைகள் மற்றும் விரிவுரைகளை நடத்தி இளைய சமுதாயத்தினரிடம் இசையைக் கொண்டு சேர்க்கும் பெரும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.
- தினமலர் வாசகி சுசிலாமணிக்கம், தமிழ்மற்றும் புலம்பெயர் தமிழர்ஆய்வுநிறுவனம்