ADDED : ஜூலை 26, 2024 11:06 AM

எழுத்தாளரின் கர்வம்
அந்த எழுத்தாளரின் கதை ஒன்று திரைப்படமாக்கப்பட்டு அது பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அந்த எழுத்தாளரின் நாவல்களைத் திரைப்படமாக்கும் முயற்சி நடந்தது. அவருக்குப் பெரிய விழா எடுத்தார்கள்.
அவர் என் நண்பர் என்பதால் முன் வரிசையில் எனக்கு இடம் ஒதுக்கினார்கள். விழா நல்லபடியாக நடந்து முடிந்தது. எழுத்தாளர் மேடையிலிருந்து இறங்கும் போது வாசகன் ஒருவன் திடீரென ரோஜா மாலையை அணிவித்தான். எங்கிருந்துதான் கோபம் வந்ததோ தெரியவில்லை. அதைக் கழற்றி எறிந்தார். வாசகனின் முகம் வாடியது.
அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் அரங்கத்தை விட்டு வெளியேறும் போது அழகி ஒருத்தி வழிமறித்தாள்.
“எழுத்தாளன் வாசகனை அவமதித்துவிட்டான் எனக் கோபமா?”
தாயின் காலடியில் விழுந்து வணங்கினேன்.
“எழுத்தாளர் செய்தது பெரிய தவறு. அவன் என்ன அடித்தானா இல்லை, திட்டினானா? மாலைதானே போட்டான்? பிடிக்கவில்லை என்றால் சொல்லியிருக்கலாமே? இப்படியா மாலையை எறிவார்கள்? வாசகனின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?”
“சொன்னால் புரியாது. செய்முறை விளக்கமே தருகிறேன்”
என் முன்பிருந்த பச்சைப் புடவைக்காரியின் உருவம் மங்கலாகி கொண்டே வந்தது.
மறுநாள் காலை. என் அலைபேசி ஒலித்தது.
“நான்...பேசறேன்.”
பேசியவர் பெரிய இயக்குனர்.
“உங்க மனசே மனசே நாவல படிச்சேன். என்னால புத்தகத்தக் கீழ வைக்க முடியல. அத வச்சி ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன். நீங்க சென்னை வரும் போது டேர்ம்ஸ் பேசிக்கலாம். மொத்தப் பணத்தையும் முதல்லையே கொடுக்கிறேன்”
மறுவாரமே சென்னை போனேன், கதையை நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டார். நடிகர்கள் யார் என இயக்குனர் சொன்னார்.
மறுவாரமே படப்பிடிப்பு தொடங்கியது. மூன்றே மாதத்தில் படத்தை முடிக்க தீபாவளியன்று வெளியானது. டைட்டிலில் என் பெயர் வந்த போது பெருமையாக இருந்தது.
படம் நன்றாக ஓடியது. ஒடிடியிலும் வெளியானது. வேற்று மொழி உரிமைகளும் விலை போனது. நல்ல பெயர், புகழ், நிறைய பணம் கிடைத்தது. பச்சைப்புடவைக்காரி மனசு வைத்தால் எதுவும் நடக்கும் என புரிந்து கொண்டேன்.
திரை உலகில் பிரபலமாகி விட்டேன். பெரிய இயக்குனர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. ஒரு திரைப்படத்தில் நாயகியின் தந்தை வேடத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. என் பெயர் பட்டி தொட்டியெல்லாம் பரவியது.
என்னைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் எனக்காக பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார்.
“விழாவுக்கு நீங்க சாதாரணமா வந்துராதீங்க. மேக்கப் போட ஆள் அனுப்பறேன். புது டிரஸ்சும் அனுப்பி வைக்கறேன். ஹீரோ மாதிரி விழாவுக்கு வரணும்”
ஒப்பனைக் கலைஞர்கள் என்னை அழகுபடுத்தினர். இயக்குனர் அனுப்பிய பென்ஸ் காரில் கிளம்பினேன். வரவேற்க திரையுலகப் பிரபலங்கள் காத்திருந்தனர்.
முகத்தில் ஒப்பனை கொஞ்சம் அதிகமாக இருந்தது. கைபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என ஒப்பனைக் கலைஞர் சொல்லியிருந்தார்.
மேடையேறும் சமயம். எங்கிருந்தோ வந்த ஒருவர் ஆளுயர ரோஜா மாலையை எனக்குப் போட்டான். அந்த மாலை கன்னத்தில் பட்டு ஒப்பனை கலைந்தது. பழியாய்க் கோபம் வந்தது. மாலையைக் கழற்றி எறிந்தேன். மாலை போட்டவனை அறைந்தேன்.
இயக்குனர் விநோதமாகப் பார்த்தார்.
“நியாயமா அந்த ஆளக் கொன்னு போட்டிருக்கணும். அறையோட விட்டேனேன்னு சந்தோஷப்படுங்க” ஈவு இரக்கமில்லாமல் பேசினேன்.
திடீரென குளிர்ந்த நீர் என் முகத்தில் பட்டது. திடுக்கிட்டு விழித்தேன்.
நடந்ததெல்லாம் கற்பனைக் காட்சி தானா? நிஜத்தில் எதுவுமே நடக்கவில்லையா?
பச்சைப்புடவைக்காரி சிரித்தபடி“அவன் மாலையைத் துாக்கியெறிந்தது தப்பு என்றாயே. நீ மாலை போட்டவனைக் கன்னத்தில் அறைந்தாயே, அது என்னப்பா நியாயம்? நீ செய்தால் சரி, அவன் செய்தால் தப்பா?”
தலை குனிந்தேன்.
“அந்த எழுத்தாளனுக்குக் கொடுத்தளவுக்கு பெயரையும் புகழையும் நான் உனக்குக் கொடுத்திருந்தால் அவனைவிட மோசமாக நீ நடப்பாய். எனக்கு முக்காலமும் தெரியும். அதனால்தான் உன்னை அந்தளவிற்கு உயர்த்தவில்லை.”
“தாயே எனக்குப் பெயரையும் புகழையும் கொடுங்கள் என எப்போதாவது கேட்டேனா?”
“கேட்டால்தானா? உன் ஆழ்மனதில் இருக்கும் ஆசை, ஏக்கத்தை நான் அறிவேன். உனக்குப் பெரியளவில் பெயர், புகழ், பணம் என எல்லாம் கொடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அதற்குள் உனக்குள் ஒரு பெரிய தெளிவு வந்துவிட்டது.”
“என்ன தெளிவு, தாயே?”
“பெயர், புகழ், பணத்திற்காக ஏங்கிய நீ என்னால் யாரும் எவ்விதத்திலும் காயப்படக் கூடாது என அழுத்தமாகப் பிரார்த்தித்துக் கொண்டாய். அது உன்னுடைய புகழாசையைவிட மிகவும் வலுவாக இருந்தது. அதனால்தான் அதை முதலில் நிறைவேற்றினேன். உன்னிடம் இருக்கும் திறமைக்கு எங்கோ பெரிய உச்சாணிக் கொம்பில் இருந்திருக்க வேண்டும். ஆனால் யாரையும் காயப்படுத்தக்கூடாது என்ற பிரார்த்தனை இருப்பதால் உன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன்.”
“உங்களைப் படியளப்பவள் என சும்மாவா சொல்கிறார்கள்? இன்று எனக்குப் பெரிய ஞானத்தைக் கொடுத்து விட்டீர்கள், தாயே!”
“என்னப்பா ஞானம்?”
“அந்த எழுத்தாளர் மாலையைத் துாக்கியெறிந்தார். நான் அவர் இடத்தில் இருந்திருந்தால் அப்படிச் செய்திருக்க மாட்டேன் என கர்வப்பட்டேன். எனக்கு அந்தளவுக்கு பெயரும் புகழும் இருந்தால் நான் அவரை விடவும் மோசமாக நடந்து கொண்டிருப்பேன் என புரிய வைத்தீர்கள் தாயே”
“அடுத்தவரைக் காயப்படுத்தக்கூடாது என்ற தெளிவு இருந்ததால் நீ தப்பித்தாய்.”
“அந்தத் தெளிவுகூட நீங்கள் கொடுத்த வரம்தானே! இன்னொரு வரம் கேட்டால் தருவீர்களா?”
“ கேட்கும் வரத்தைப் பொறுத்தது”
“அந்த எழுத்தாளர் பாவம் சாதாரண மனிதர்தானே. எனக்குக் கொடுத்த அதே தெளிவை அவருக்கும் கொடுத்தால் என்ன? புகழின் உச்சியில் நின்று கொண்டு அவர் ஆயிரம் பேரை இப்படிக் காயப்படுத்தினால் அவருடைய கர்மக் கணக்கு இடியாப்பச் சிக்கலாகிவிடுமே!”
“வேறு வழியில்லை. கர்மக் கணக்குச் சிக்கலாகி பல துன்பங்களை அனுபவித்த பிறகுதான் அந்த எழுத்தாளனுக்குத் தெளிவு கிடைக்கும்.”
“எனக்கு மட்டும் முதலிலேயே கிடைத்துவிட்டதே?”
“யார் சொன்னார்கள்? நீ பல பிறவிகளில் புகழின் உச்சியில் இருந்து ஆட்டம் போட்டாய். ஆயிரம் ஆயிரம் பேரைக் காயப்படுத்தினாய். வெளியில் சொல்ல முடியாத அளவிற்குத் துன்பம் அனுபவித்தாய். அதன் பிறகுதான் உனக்குத் தெளிவு கிடைத்தது.”
“புரிகிறது தாயே! ஆன்மிகப் பள்ளியில் அந்த எழுத்தாளனும் நானும் மாணவர்கள். நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். அவர் ஆறாவது படித்துக்கொண்டிருக்கிறார். அவர் என்னுடைய இறந்த காலம். நான் அவருடைய எதிர்காலம். நான் வேறு ஒரு வரம் கேட்கலாமா?”
“தாராளமாக.”
“எந்தக் காலத்திலும் நீங்கள் என் மனதை விட்டு நீங்காத வரம் வேண்டும் தாயே!”
தாயின் சிரிப்பொலி எங்கும் எதிரொலித்தது.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com