ADDED : ஜூலை 26, 2024 10:21 AM

எட்டுக்குடி
கத்தியால் வெங்காயத்தை அரிந்துக் கொண்டிருந்த பேரன் யுகனின் மனைவி தேவந்தி, 'அம்மா' எனக் கத்தினாள். அவளின் அலறலைக் கேட்டு யுகனும், பாட்டியும் ஓடி வந்தனர்.
“என்னாச்சு தேவந்தி?”
“வெங்காயம் வெட்டும் போது கத்தி விரல்ல பட்டுடுச்சு”
“பாத்துமா... ரத்தம் கசியுதே''
“யுகா... உடனே ஈரத் துணியை விரலில் சுத்துடா. ரத்தம் நின்னுடும். சுத்தமான துணியா எடுத்துக்கோ”
“சரி பாட்டி”
தேவந்தியின் விரலில் ஈரத்துணியால் சுற்றினான் யுகன். 'நான் வெங்காயத்தை வெட்டுகிறேன்'' எனச் சொன்னார் பாட்டி.
“நான் செய்றேன் பாட்டி” என்றான் யுகன்.
“இருக்கட்டும் எல்லாம் தெரிஞ்ச வேலை தானே. நீ உட்காரு''
அருகில் அமர்ந்தான் யுகன்.
“என்னவோ பாட்டி! விரல்ல லேசா வெட்டினதுக்கே தேவந்தியால வேலை செய்ய முடியல. சிக்கல் சிங்கார வேலர் கோயிலில சிலை செதுக்கின சிற்பி இரண்டு கட்டை விரலும் வெட்டுப்பட்ட பின்பு எட்டிச்செடிங்க பக்கம் போனாருன்னு சொன்னியே, அப்புறம் என்ன ஆனார்”
“ஆமாமா.. எட்டுக்குடி பற்றி இப்ப சொல்றேன் கேளு. கட்டைவிரல் வெட்டப்பட்ட நிலையில் அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்ற சிற்பி, தன் கட்டை விரல் இல்லாமலேயே முருகனை வேண்டி மீண்டும் மயிலுடன் ஒரு சிலையை உருவாக்கினார். அந்த சிலை உயிர் பெற்று மயில் பறக்கத் தொடங்கியது. அதைப் பார்த்தவர்கள் மயிலை பிடித்து சிற்பியிடம் கொடுத்தனர். மயிலின் நகத்தில் அந்த சிற்பி சிறிது மாறுதல் செய்ததும் பறப்பது நின்றது. பின்னாளில் மயிலை எட்டிப்பிடி என்பதே எட்டுக்குடி என்றானது''
“இந்த கோயிலுக்கு என்ன சிறப்பு பாட்டி?”
“இங்கிருந்து தான் முருகன் திருச்செந்துாருக்கு போர் புரிய கிளம்பினாரு. வழியில் சிக்கல் கோயிலில் வேல் வாங்கியபின் சூரனை வதம் செய்தாரு. அடுத்து எட்டுக்குடி முருகன் சிலைக்கான சிறப்பு என்னன்னா... குழந்தையாக, இளைஞனாக, முதியவராக என்று எப்படி நினைத்தாலும் அப்படியே முருகன் காட்சி தர்றாரு”
“அதிசயமா இருக்கே''
“இது ஒரு பரிகார தலமும் கூட''
“என்ன பரிகாரம்?”
“எட்டுக்குடி முருகனுக்கு பூமாலை சூட்டி வழிபட்டால் வறுமை தீரும். முருகனுக்கு சந்தன அபிஷேகம் செய்தால் உடல் நலம் பெருகும். குடும்பப் பிரச்னை தீர புது வஸ்திரம் சாத்துவாங்க. இந்த கோயிலுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அது முருகன் சிலையில் இருந்து வெளியேறும் ரத்தம்.
விரல் வெட்டப்பட்ட பின், அடுத்த சிலையை வடிவமைக்க உயிரோட்டமிக்க கல்லை சிற்பி தேர்வு செய்தார் இல்லையா... அதில் முருகன், மயிலை செதுக்கி வடித்துக் கொண்டிருந்த போது சிற்பியின் கட்டை விரலை வெட்டிய குறுநில மன்னன் முத்தரசன் வந்தான். அனுமதி பெறாமல் இன்னொரு சிலையை செய்த சிற்பியின் பார்வையை இழக்கச் செய்தான். அவர் செதுக்கிய முருகன் சிலையோ நேரில் நிற்பது போல காட்சியளித்தது. அந்த சிலையே எட்டுக்குடி சவுந்தரேஸ்வரர் கோயிலில் இன்றும் உள்ளது”
“இக்கோயிலில் மயிலின் மீது முருகன் அமர்ந்துள்ளார். இச்சிலைக்கு ஆதாரம் மயிலின் கால்கள் மட்டுமே. இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் தினமும் பால் அபிஷேகம் செய்றாங்க. முருகனுக்கு போரில் துணையாக இருந்த நவ வீரர்கள் சன்னதி இருக்கு”
“திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் திருவாய்மூரில் இருந்து 3 கி.மீ., தொலைவில் கோயில் இருக்கு. இதனருகே பிரம்மபுரீஸ்வரர், திருவாய்மூர் லிங்கம், வாய்முருகுநாதர் கோயில்கள் உள்ளன. இன்னொரு சிறப்பும் இங்கிருக்கு. ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவரின் சமாதி வன்னி மரத்தடியில் உள்ளது.
“எட்டுக்குடிய பத்தி எத்தனையோ நல்ல விஷயங்களை அடுக்கிட்டியே பாட்டி”
“முருகனைப் பத்தி பேசுற எல்லாமே நல்ல செய்திகள் தான் யுகா. ஐப்பசியில கந்த சஷ்டி விமரிசையாகக் கொண்டாடப்படுது. 'எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா' என்னும் கோஷம் இங்கு பிரபலமானது.
குழந்தை வரம் பெற்றவர்கள் மணியை காணிக்கையாக கட்டுறாங்க. இங்கு காவடி எடுத்தா கவலை பறந்தோடும். அருணகிரிநாதர் இங்கு நான்கு பாடல் பாடியிருக்காரு.
இங்கு நிரைத்த விராலுார் சேலுார்
செய்ப் பழ நிப் பதியூரா ஆரூர்
மிக்க இடைக்கழி வேளூர் தாரூர்... வயலுாரா
எச் சுருதிக்குளும் நீயே தாயே
சுத்த விறல் திறல் வீரா தீரா
எட்டிகுடிப் பதி வேலா மேலோர்... பெருமாளே
இங்கு சித்ரா பவுர்ணமி விசேஷமானது. முருக பக்தர்கள் ரத காவடி, பால்காவடியை நேர்த்திக்கடனாக செலுத்துவாங்க.
இந்த ஆண்டு (2024) ஏப். 22 திங்கட்கிழமை அதிகாலை 5:00 மணி முதல் ஏப். 24 புதன்கிழமை மதியம் 1:00 மணி வரை 56 மணி நேரம் பால் அபிஷேகம் தொடர்ந்து நடந்துச்சு.சிக்கலைப் போல எட்டுக்குடியிலும் தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கும். அப்போது இந்த கலியுகத்துல லட்சக்கணக்கான பக்தர்கள் ஓரிடத்தில் கூடுவது அதிசயம்தான் யுகா''
“லட்சக்கணக்கான பக்தர்களா...”
“இது கண்கண்ட உண்மை. அதுக்கு எண்கண் முருகனே சாட்சி”
“யார் இந்த எண்கண் முருகன்? புதுசா இருக்கே”
“ புதுசு இல்லப்பா... எட்டுக்குடி முருகன் சிலையை வடித்த சிற்பி அடுத்து போன ஊர் தான் எண்கண். சிற்பியின் வேதனை தீர்ந்த இடம்”
''அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நானே ஞாபகப்படுத்துறேன் பாட்டி. இன்னிக்கி கட்டைவிரல் வெட்டுப்பட்ட மாதிரி அப்புறம் கண்ணுல துாசி ஏதாவது விழுந்து நினைவுக்கு வரப் போகுது” என்று சொல்லி சிரித்தபடி பாட்டியிடம் நறுக்கிய வெங்காயத்தை வாங்கினாள் தேவந்தி.
“என்னம்மா தேவந்தி... காயம் பரவாயில்லையா... இனியாவது உஷாரா இரும்மா” என்றாள் பாட்டி.
-இன்னும் இனிக்கும்
பவித்ரா நந்தகுமார்
94430 06882