sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஆகஸ்ட் 26, 2025 ,ஆவணி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 5

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 5

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 5

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 5


ADDED : ஜூலை 18, 2024 11:29 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 11:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல் சிங்காரவேலர்

கேழ்வரகு அடையை வேக வேகமாக சாப்பிட்டதால் விக்கல் வந்தது பாட்டிக்கு.

“என்னாச்சு, தண்ணி குடி பாட்டி''

“ஒன்னும் இல்லடா. அடை அடைப்பாயிடுச்சு, விக்கல் வந்துடுச்சு''

“போன வாரம் நீ சிக்கல் சிங்காரவேலரை பத்தி சொல்றேன்னு சொல்ல மறந்துட்டயில்ல, அதான் விக்கல் வந்துடுச்சு'' எனச் சொல்லிச் சிரித்தான் யுகன்.

“ஓ... இது சிக்கலை சொல்வதற்காக வந்த விக்கலா?” என தொடர் விக்கலிலும் சிரிப்பு வந்தது பாட்டிக்கு.

“ரெண்டு நாள் முன்னாடியே சொல்லி இருக்கணும்”

“இதோ... சாப்பிட்டு வரேன்”

ஒருவழியாக அடைக்கும் விக்கலுக்கும் கை கழுவினார் பாட்டி.

“என்ன பாட்டி, உனக்கு வியர்த்து கொட்டுது”

“சிக்கல் சிங்கார வேலரை பற்றி சொல்லப்போறேன்ல அதான்...”

“இந்த பெயரை எங்கோ கேட்டது போல இருக்கே” என யோசித்தான் யுவன்.

“கேட்டிருப்ப. தில்லானா மோகனாம்பாள் கதையில சிக்கல் சண்முக சுந்தரம் தான் கதாநாயகன். இந்த ஊர்ல புகழ் பெற்ற முருகன் கோயில் இருக்கு. தாயிடம் வேல் வாங்கும் போது வியர்வை சிந்துபவர் இவர். இந்த கோயிலோட தல வரலாறு மிக சுவாரஸ்யமானது. புராண காலத்தில் தேவலோக பசுவான காமதேனு பஞ்சம் காரணமா மாமிசத்தை சாப்பிட்டது... இதனால் கோபம் கொண்ட சிவன் அதற்கு சாபம் வழங்கினார். கவலையுற்ற காமதேனு சாப விமோசனம் வேண்டியது. மனம் இரங்கிய சிவன் பூலோகத்தில் மல்லிகை வனமான இத்தலத்தில் வணங்கினால் சாபம் நீங்கும் என அருளினார். அதன்படியே சிங்கார வேலர் கோயில் குளத்தில் நீராடி விமோசனம் பெற்றது”

“ம்... அப்புறம்”

“இந்த கோயிலுக்கு வந்த காமதேனு பசுவின் மடியில் பெருகிய பாலால் ஒரு குளமே உருவானது. அதுவே இங்குள்ள தீர்த்தம். நவீன உபகரணம் மூலமா நாமெல்லாம் பாலில் இருந்து வெண்ணெய் எடுக்க கத்துக்கிட்டோம். இதை வசிஷ்ட முனிவர் அப்பவே செய்துட்டார். பாலில் இருந்து கிடைத்த வெண்ணெய்யை கொண்டே சிவலிங்கம் வடித்தார். பூஜை முடிந்த பின்பு அதை எடுக்க முற்பட்டார். அது அங்கேயே சிக்கிக் கொண்டது. அதனால் இப்பகுதி சிக்கல் என்றானது. சிக்கல் சிங்காரவேலரை தரிசித்தால் சிக்கல் யாவும் தீரும்”

“அதுதான் சிக்கல பத்தி பேசியதும் உன் விக்கலும் பறந்திடுச்சு பாட்டி”

“சும்மா இருடா, கிண்டல் பண்ணாத. அப்புறம் போன விக்கல் ரயிலேறி வந்திட போகுது'' பாட்டியும் பதிலுக்கு பதில் கொடுத்தார்.

“ஆமா, சிக்கல் எங்கிருக்கு பாட்டி?”

“நாகப்பட்டினத்தில் இருந்து 6 கி.மீ., துாரத்தில இருக்கு. வேல் நெடுங்கண்ணி அம்மனுடன் நவநீதேஸ்வரர் என்ற பெயரில் சிவன் இங்கு இருக்கிறார். கோச்செங்கச் சோழன் கட்டிய மாடக் கோயில் இது. இங்குள்ள ராஜகோபுரம்

80 அடி. ஏழு நிலைகளைக் கொண்டு கம்பீரமாக உள்ளது”

“இங்கும் அப்பாவோடு தான் முருகன் இருக்காரா?”

“இங்கு பெற்றோரான அம்மையப்பருக்கு நடுவில் அமர்ந்திருக்கிறார். அதனால் இங்கு சிங்காரவேலர் குழந்தை வரம் தருபவராக இருக்கிறார். கோமளவல்லி தாயாருடன் கோலவாமன பெருமாளும் இங்கு அருள்பாலிக்கிறார். அம்மா அப்பாவோட மட்டுமல்ல தாய்மாமாவுடனும் சேர்ந்திருக்கிறார்”

“ஆச்சரியமா இருக்கே”

“ஆச்சர்யம் தான். சைவமும் வைணவமும் இணைந்த கோயில் இது. கோலவாமனப் பெருமாள் நீராடிய கயா தீர்த்தம், லட்சுமி தீர்த்தம் என அழைக்கப்படுது''

“அப்போ... பல சிறப்பு இங்கிருக்கு போல''

“இன்னும் கேளு. அம்பிகையின்

51 சக்தி பீடங்களில் ஒன்று. முருகப்பெருமானுக்கு வேல் வழங்கியதால் வேல்நெடுங்கண்ணி என்னும் பெயருடன் அம்பிகை அருள்புரிகிறாள். கண் பார்வையாலேயே அம்பிகை ஆட்சி செய்த இடங்கள் ஐந்து. காஞ்சி காமாட்சி,

மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, நாகப்பட்டினம் நீலாயதாட்சி, அந்த

வரிசையில் சிக்கலில் வேல்நெடுங்கண்ணி. அம்மனின் கையில் தாமரை மலர் இருக்கும். இங்கு மரகதலிங்கம் இருப்பது கூடுதல் சிறப்பு”

“சரி பாட்டி, முருகனுக்கு எப்போது வியர்க்கும்?”

“அதுவா, சூரபத்மனுடன் போர் புரியும் முன்பாக சிவனிடம் ஆசி பெற்றார் முருகன். ஆசி வழங்கிய அவர் 11 ஆயுதங்களை முருகனுக்கு கொடுத்தார். முருகனுக்கு தான் ஆறுமுகம், 12 கைகள் ஆச்சே… அந்த ஆயுதங்களைத் தன் 11 கைகளில் ஏந்தி கொண்டார்”

“அப்போ... அந்த 12 வது கை மட்டும் சும்மா இருந்ததா?”

“அவசர குடுக்கை. இடையில பேசிக்கிட்டே இருந்தா எப்படி? 11 ஆயுதங்களையும் மகனுக்கு கொடுத்த சிவன் உங்க அம்மா சிக்கல்ல தவம் செய்யுறா, அங்கு சென்று ஆசி பெற்று திருச்செந்துாருக்குச் செல் என்றார். உடனே தாயைத் தேடி சிக்கலுக்கு வந்தார் முருகன். அம்பிகை ஆசி வழங்கிய போது தன் சக்தியை திரட்டி வேலாக வடித்து மகனிடம் ஒப்படைத்தாள். அந்த வேலை வாங்கிய போது முருகன் முகத்தில முத்து முத்தா வியர்வை துளிகள் பூக்கும்”

“நிஜமா இப்போதும் வியர்க்குதா பாட்டி?”

“ஆமாண்டா வியர்வை துளி ததும்ப ததும்ப முருகன் அருள்காட்சி தரும் தலம் இது”

“இதைக் கேட்கும் போதே புது சக்தி உடம்புக்குள்ள வருது பாட்டி”

“வியர்வை சிந்தும் முருகனை தரிசிக்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். சிக்கலில் வேல் வாங்கி செந்துாரில் சூரனை வதம் செய்தார் முருகன். அவரைப் பற்றி அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.

சென்னி பற்றியறுத்த கூரிய

மின்னிழைத்த திறத்த வேலவ

செய்ய பொற்புன வெற்பு மானணை...

மணிமார்பா செம்மனத்தர் மிகுத்த மாதவர்

நன்மை பெற்ற உளத்திலேமலர்

செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய… பெருமாளே

“ம்... ஒரு வழியா போர் முடிஞ்சதா பாட்டி?”

“இந்த கோயில் வரலாறு இன்னும் முடியல”

“இன்னும் இருக்கா?”

“தெய்வீகம் பொருந்திய சிற்பி ஒருவர் சிக்கலில் ஒரு முருகனின் சிலையை வடித்தார். மயிலின் மீது முருகன் அமர்ந்திருப்பது போல அந்த சிலை

இருந்தது. அப்பகுதியை ஆட்சி செய்த முத்தரசச் சோழன் சிலை பற்றிக் கேள்விப்பட்டு வந்தான். சிற்பிக்கு பல பரிசுகளை அளித்தான். இது போல சிலை வேறெங்கும் இனி அமையக் கூடாது என சிற்பியின் கட்டை விரல்களை வெட்டினான்”

“இதென்ன அநியாயம்”

“தான் ஆட்சி செய்யும் ஊரில் மட்டுமே அழகான சிலை இருக்க வேண்டும் என்ற பேராசை தான்”

“கட்டை விரல் இல்லைன்னா என்ன பண்றது?”

“வேதனையுடன் சிக்கலை விட்டு வெளியேறி எட்டிச் செடிகள் நிறைந்த பகுதிக்கு குடியேறினார். அதுதான் எட்டுக்குடி.”

“அங்கேயும் போய் முருகன் சிலையை வடித்தாரா பாட்டி?”

“டேய், ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடனுமோ அவ்வளவுதான் சாப்பிடணும். ஒரு தாய்க்கு தெரியும் தன்னுடைய குழந்தைக்கு எவ்வளவு உணவு பரிமாறனும்னு. அதனால எட்டுக்குடிய அடுத்த வாரம் எட்டிப்பிடிப்போம்.”

“ஆனா நீ எனக்கு தாய் இல்லயே!

“அப்ப, பேய்னு சொல்ல வர்றியா?”

“ஐயோ, பாட்டினு சொல்ல வந்தேன். நீ வேற! இந்த நேரத்துல எனக்கு ஒரு தத்துவம் தோணுது பாட்டி”

“அப்படியா... சொல்லு பார்ப்போம்”

“ஒருத்தரோட விக்கலுக்கு காரணமான உறவாக நாம் இருக்க வேண்டுமே தவிர சிக்கலுக்கு காரணமான உறவா இருக்கக் கூடாது. எப்பவோ படிச்சது”

“விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னு சொன்ன கதையால்ல இருக்கு” என கன்னத்தில் கை வைத்தாள் பாட்டி. அதைக் கேட்ட தேவந்தி 'க்ளுக்' என சிரித்தாள்.

-இன்னும் இனிக்கும்

பவித்ரா நந்தகுமார்

94430 06882






      Dinamalar
      Follow us