
தமிழ், வடமொழியில் புலவராகத் திகழ்ந்தவர் பொன்னாயிரம் கவிராயர் என்னும் சிந்தாமணிப்பிள்ளை. பதினாறாம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டிய நாட்டில் சேற்றுார் எனும் ஊரில் பிறந்தார். தற்போது சேத்துார் எனப்படும் இத்தலம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ளது.
சேறைத் தலபுராணம் என்னும் நுாலை இயற்றிய இவர், அரங்கேற்றம் செய்த உடனே மழை பொழிந்தது. மன்னரும் அவரது கவித்திறமையைப் பாராட்டி ஆயிரம் பொற்காசுகளால் கனக அபிஷேகம் செய்தார். ஆனால் அங்கிருந்த சந்திராமுத கவிஞர் இதை விரும்பவில்லை.
பொறாமையால், ''இவனுக்கு இவ்வளவு மரியாதையா? தங்கத்தை அள்ளித் தலையில் கொட்டி... யப்பா! என்ன அமர்க்களம்'' என ஆவேசப்பட்டார்.
''அவையோரே! இந்நுாலில் குற்றங்கள் நிறைய உள்ளன'' என வாதிட்டார்
நுாலாசிரியரோ, ''என்ன குற்றம் என்பதைக் கூறுங்கள்'' என்றார்.
''நீங்கள் இயற்றிய நுாலுக்கு மூல நுாலான பிரம்ம வைவர்த்த புராணத்தில் நாட்டுப் படலம், நகரப்படலம் இல்லையே! அப்படியிருக்க நீர் இதை எப்படி பாடலாம்?'' எனக் கேட்டார்.
'' மூலநுாலான ஆலாஸ்ய மகாத்மியத்தில் நாட்டுப்படலம், நகரப்படலம் இடம்பெறவில்லை. ஆனாலும் பரஞ்சோதிமுனிவர் தமிழில் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் நாடு, நகரப் படலங்களை பாடினாரே... அதை பின்பற்றியே எழுதினேன்'' என்றார்.
இப்படியாக இருவருக்கும் வாதம் தொடர்ந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் கவிராயர் பதில் அளித்தார். இறுதியாக ''சேக்கிழாரின் பெரிய புராணம், கச்சியப்பரின் கந்த புராணத்தை தெய்வம் ஒப்புக் கொண்டதைப் போல உங்கள் நுாலைத் தெய்வம் ஏற்க வில்லையே'' எனக் கேட்ட போது கவிராயர் திகைத்தார்.
ஆனால் மக்கள் அனைவரும், ''நுாலை அரங்கேற்றம் செய்த போது மழை பொழிந்ததே! அது கடவுளின் அருள் தானே?''எனக் கேட்டனர். மழை பெய்ததை தெய்வம் ஒப்புக் கொண்டதாக ஏற்க முடியாது என மறுத்தார்.
மனம் கலங்கிய கவிராயர் அம்பிகையை தியானித்தார். உடனே சன்னதிக்குள் இருந்த கிளி வந்து அம்மனிடம் இருந்த பூச்செண்டை கவிராயரிடம் கொடுத்து விட்டு பறந்தது.
இதைக் கண்ட சந்திராமுத கவிஞர் மனம் திருந்தி, ''அவையோரே... ஆயிரம் பொற்காசுகளால் அபிேஷகம் செய்ததால் கவிராயரை 'பொன்னாயிரம் கவிராயர்' என போற்றட்டும்'' என்றார். அதன் பின் மன்னரின் ஆணைப்படி கவிராயரைப் பல்லக்கில் நகர்வலம் வந்தார்.
ஆராய்ச்சியால் கடவுளை அடைய முடியாது. அன்பால் மட்டுமே அருள் பெற முடியும்.