/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பகலில் நடை அடைக்காத ஆதி திருவரங்கம் பெருமாள் கோவில்
/
பகலில் நடை அடைக்காத ஆதி திருவரங்கம் பெருமாள் கோவில்
பகலில் நடை அடைக்காத ஆதி திருவரங்கம் பெருமாள் கோவில்
பகலில் நடை அடைக்காத ஆதி திருவரங்கம் பெருமாள் கோவில்
ADDED : டிச 02, 2016 11:07 AM

விழுப்புரம் மாவட்டம் ஆதி திருவரங்கத்தில், ரங்கநாதப் பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார். பகலில் இந்தக் கோவில் நடை அடைக்கப்படுவதில்லை.
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை ஒட்டி இவரைத் தரிசிப்போம்.
தல வரலாறு: சந்திரன் தனது மனைவியரின் சாபத்தால் ஒளி இழந்து வருந்தினான்.
தேவர்களின் ஆலோசனைப்படி இத்தலத்திலுள்ள குளத்தில் நீராடி திருமாலை வழிபட்டு மீண்டும் ஒளி பெற்றான். சந்திரனுக்கு அருள்புரிந்த திருமாலை, இத்தலத்திலேயே எழுந்தருளும்படி தேவர்கள் வேண்டிக் கொண்டனர். தேவதச்சரான விஸ்வகர்மாவை வரவழைத்த பெருமாள், தன்னைப் போலவே சிலை வடித்து கோவில் எழுப்ப உத்தரவிட்டார். ரங்கநாதப்பெருமாள் என பெயர் பெற்றார்.
பெரிய பெருமாள்: தமிழகத்திலுள்ள பெரிய பெருமாள் விக்ரகங்களில் இதுவும் ஒன்று. முதல் யுகமான கிருதயுகத்திலேயே வந்தவர் என்பதால் 'பெரிய பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். இந்த தலமும் ஆதி திருவரங்கம் எனப்படுகிறது. ரங்கநாயகி தாயார் தனி சன்னிதியில் இருக்கிறாள். புன்னை மரம் தலவிருட்சமாக உள்ளது. கோவில் அருகில் சந்திர புஷ்கரணியும், பெண்ணையாறும் தீர்த்தங்களாக உள்ளன. ஆஞ்சநேயர் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். இங்கே பகலில் நடை சாத்தப்படுவதில்லை என்பது விசேஷம்.
குழந்தை பாக்கியம்: சோமுகாசுரன் என்பவன் பிரம்மாவிடம் இருந்த வேதங்களை திருடி கடலுக்கடியில் மறைத்து வைத்தான். தேவர்கள் வேதங்களை மீட்டுத் தர திருமாலிடம் வேண்டினர். அசுரனைக் கொன்ற திருமால், வேதங்களை இத்தலத்தில் வைத்து மீண்டும் அளித்தார். சுருதகீர்த்தி என்ற மன்னன் குழந்தைப் பேறு இல்லாமல் வருந்தினான். நாரதரின் அறிவுரைப்படி ரங்கநாதரை வழிபட்டான். பெருமாளின் அருளால் நான்கு பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். குழந்தை இல்லாதவர்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் மழலைபாக்கியம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறக்க பெருமாளை வழிபடுகின்றனர்.
இத்தலத்தை ஆழ்வார்கள் நேரடியாக பாடாவிட்டாலும், திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் 'ஏழை ஏதலன்' என தொடங்கும் பாசுரத்தில் கோவில்
பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. வைணவ ஆச்சாரியாரான வேதாந்த தேசிகன் இக்கோவிலைப் பாடியுள்ளார்.
இருப்பிடம்: திருக்கோவிலூரில் இருந்து 16 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - இரவு 7:30 மணி.
அலைபேசி: 94446 91885, 81440 47339

