/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பகவத்கீதையும் திருக்குறளும் - 10
/
பகவத்கீதையும் திருக்குறளும் - 10
ADDED : ஜூலை 18, 2024 11:32 AM

தியானம் என்றால்...
கந்தன் மாலை நேரத்தில் தாத்தாவை பார்க்க வந்தான். ''என்ன... யூனிபார்ம் கூட மாற்றாமல் வந்திருக்கியே'' எனக் கேட்டார். ''இன்னிக்கு தியானம் சொல்லிக் கொடுக்க டீச்சர் வந்தாங்க.
இஷ்ட தெய்வத்தை நினைத்தபடி கண்ணை மூடி தியானப்பயிற்சி செய்தோம். அது ஒரு புது அனுபவம்.
பகவத் கீதையிலும் திருக்குறளிலும் தியானம் பற்றி என்ன சொல்லி இருக்குன்னு உங்களிடம் கேட்க வந்தேன்'' என்றான்.
''தியானம் எப்படி செய்ய வேண்டும் என்பதை பகவத் கீதையில் 2ம் அத்தியாயத்தின் 58வது ஸ்லோகத்தில் பகவான் கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.
யதா³ ஸம்'ஹரதே சாயம்' கூர்மோ(அ)ங்கா³னீவ ஸர்வஶ; ।
இந்த்³ரியாணீந்த்³ரியார்தே²ப் 4 யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ॥
தலை, கால்களை ஓட்டிற்குள் இழுத்துக் கொள்ளும் ஆமை போல கடவுளை அடைய விரும்பும் யோகிகள் அடக்கமாக செயல்படுவர். பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய பணிகளைச் செய்யும் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐம்பொறிகளை தன்னுள்ளே அடக்கி கட்டுப்பாடாக இருப்பர். எதைக் கண்டும் சலனப்படாமல் அவர்களின் மனம் நிலையாக இருக்கும்.
திருவள்ளுவரும் 126 வது திருக்குறளில்
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து
இந்த பிறவியிலேயே ஆமை போல் ஐம்பொறிகளை அடக்கியாளப் பழகினால் அது அடுத்தடுத்த பிறவிக்கும் பாதுகாப்பு தரும்.
ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவியை அடக்கினால் அது நம்மை கடவுளிடம் சேர்க்க உதவும். இதை பற்றி விரிவாக பிறகு சொல்கிறேன்.
இப்போது நான் பெருமாள் கோயிலில் நடக்கும் கம்ப ராமாயண தொடர் சொற்பொழிவு கேட்க போகிறேன். வெள்ளியும், சனிக்கிழமையும் பள்ளிக்கு போயிட்டு ஞாயிறன்று மாலையில் ராமாயணம் கேட்க கோயிலுக்கு வா'' என்றார் தாத்தா. வீட்டுக்கு கந்தனும் ஓடினான்.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554