
ஆட்சியில் உள்ளவர்கள் பதவியை தவறாக பயன்படுத்தினாலோ, லஞ்சம் வாங்கினாலோ அவர்களுக்கு தண்டனை நிச்சயம். இதை நிறைவேற்றுபவராக நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பறியலுார் வீரட்டேஸ்வரர் இருக்கிறார்.
தட்ச பிரஜாபதியின் மகளான தாட்சாயணியை திருமணம் செய்தார் சிவன். உலகை ஆட்சி செய்யும் சிவனுக்கு மாமனார் என ஆணவம் கொண்டார் தட்சன். கைலாயத்தில் சிவனைத் தரிசிக்க வருபவர்கள் நந்தியின் அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி பெறாமல் நுழைந்தார் தட்சன். விதியை மீறியதால் சிவன் அவரை புறக்கணித்தார்.
இதற்கு பழி வாங்க மருமகனை அழைக்காமல் யாகம் ஒன்றை நடத்தினார். அதை தடுக்க வீரபத்திரரை அனுப்பியதோடு தட்சன் வகித்த 'பிரஜாபதி' என்னும் பதவியை பறித்தார் சிவன். பதவியை தவறாக பயன்படுத்தினால் அதிகாரத்தை இழக்க நேரிடும். இந்த வரலாறு நடந்த இடம் திருப்பறியலுார். வீரச்செயல் நிகழ்த்தியதால் 'வீரட்டேஸ்வரர்' என சிவனை அழைக்கின்றனர். பின்னர் தவறை உணர்ந்த தட்சன் சரணடைந்ததால் சுவாமிக்கு 'தட்சபுரீஸ்வரர்' என்றும் பெயருண்டு. அம்மனின் திருநாமம் பாலாம்பிகா. நவக்கிரகங்களில் சூரிய பகவானுக்கு சன்னதி உள்ளது.
கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறன்று வீதியுலாவும், கிரக தோஷம் போக்கும் சிவபூஜையும் நடக்கும்.
பாதிக்கப்பட்டவர்கள் இங்கு முறையிட்டால் தவறு செய்தவருக்கு தண்டனை நிச்சயம்.
எப்படி செல்வது: மயிலாடுதுறையில் இருந்து செம்பொனார்கோயில் வழியாக 7 கி.மீ.,
விசேஷ நாள்: திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, சனிப்பிரதோஷம்.
நேரம்: காலை 6:00 -- 12:00 மணி; மாலை 5:00 -- 7:30 மணி
அருகிலுள்ள கோயில்: மயிலாடுதுறை மயூரநாத சுவாமி 7 கி.மீ., (நிம்மதி பெற...)
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 04364 - 205 555, 287 429