ADDED : ஜூலை 18, 2024 11:34 AM

பாரதப் பெண்களின் அடையாளம் சீதை. அவள் பூமிக்குள் மறைந்த இடமான உத்தரபிரதேச மாநிலம் சீதாமரி என்னும் இடத்தில் அவளுக்கு கோயில் உள்ளது.
சீதை இலங்கையில் இருந்ததால் அயோத்தி மக்களுக்கு அவள் மீது தவறான எண்ணம் ஏற்பட்டது. இதை போக்க அவளை விட்டு பிரியத் துணிந்தார் ராமர். அண்ணனின் கட்டளைப்படி அண்ணியான சீதையை காட்டில் விட்டு லட்சுமணன் திரும்பினார். சீதையோ ஆதரவின்றி அழுதாள். அந்த வழியாக சென்ற மகரிஷி வால்மீகியின் காதில் அழுகுரல் கேட்டது. சீதையை தன் ஆஸ்ரமத்தில் தங்க வைத்தார். கர்ப்பமாக இருந்த அவள் ராமரின் மனைவி என்னும் உண்மை அவருக்குத் தெரியாது.
லவன், குசன் என்னும் குழந்தைகள் சீதைக்கு பிறந்தனர். அவர்களுக்கு எல்லா கலைகளையும் கற்றுக் கொடுத்தார் மகரிஷி. இந்நிலையில் அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்த விரும்பிய ராமர், பட்டத்துக் குதிரையை அயோத்தியை சுற்றியுள்ள அண்டை நாடுகளுக்கு வலம் வர ஏற்பாடு செய்தார். அதை யாராவது தடுக்க முயன்றால் அவர்கள் ராமருடன் போரிட வேண்டும். அதன்பின்னரே யாகத்தை நடத்த வேண்டும்.
இதை அறியாத லவகுசர் குதிரையை ஆஸ்ரமத்தில் கட்டி வைத்தனர். குதிரையை தேடி வந்த லட்சுமணனுடன் சண்டையிட்டு அவரையும் சிறை பிடித்தனர். இதையறிந்து ராமர் அங்கு வரவே சண்டை மூண்டது. கணவரின் வருகையைக் கண்ட சீதை ஆச்சரியப்பட்டாள். லவகுசர்களைக் காட்டி 'இவர்கள் உங்களின் மகன்கள்' என்று சொல்லி ராமரிடம் அவர்களை ஒப்படைத்தாள்.
பின் பூமாதேவியை நோக்கி, ''நான் பதிவிரதை என்பது உண்மையானால் உடனே ஏற்றுக் கொள்'' என்றாள். அப்போது பூமி பிளக்க அதற்குள் மறைந்தாள். அந்த இடத்தில் கோயில் உள்ளது. இயற்கையான சூழலில் இரண்டு அடுக்காக மூன்று விமானத்துடன் கட்டப்பட்டுள்ளது.
மேல் தளத்தில் ராமாயண ஓவியங்களும், சிற்பங்களும் உள்ளன. படிகளில் இறங்கி கீழ்தளத்திறகுச் சென்றால் சீதை பூமிக்குள் சென்ற இடம் உள்ளது. வெள்ளை நிற சேலையில் மாலையுடன் காட்சியளிக்கிறாள்.
சீதை சன்னதியை பார்த்தபடி பிரம்மாண்ட அனுமன் சிலை உள்ளது. அனுமன் சன்னதியும் உள்ளது. குகை ஒன்றில் ஜடாமுடியுடன் சிவலிங்கம், நந்தி உள்ளது.
எப்படி செல்வது: வாரணாசியில் இருந்து 40 கி.மீ.,
விசேஷ நாள்: ஸ்ரீராமநவமி, ஜானகி ஜெயந்தி.
நேரம்: அதிகாலை 5:30 - இரவு 9:30 மணி
அருகிலுள்ள கோயில்: விஸ்வநாதர் 40 கி.மீ., (பாவம் தீர...)
நேரம்: அதிகாலை 2:30 - இரவு 11:00 மணி
தொடர்புக்கு: 0542 - 239 2629