ADDED : ஜூலை 26, 2024 10:24 AM

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 1886ல் ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் வாஞ்சிநாதன். பெற்றோர் வைத்த பெயர் சங்கரன். ஆனால் வாஞ்சி என்றே வாஞ்சையுடன் அழைத்தனர்.
செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு திருவனந்தபுரம் திருநாள் மகாராஜா கல்லுாரியில் பி.ஏ., படித்தார். படிக்கும் போதே முன்னீர்பள்ளம் சீதாராமய்யரின் மகளான பொன்னம்மாளை திருமணம் செய்தார்.
புனலுாரில் வனத்துறையில் பணிக்கு சேர்ந்தார். அப்போது நாடெங்கும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான போராட்டம் நடந்து வந்தது. வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா போன்றோரின் பேச்சால் கவரப்பட்ட வாஞ்சிநாதன் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார். அரசுப் பணியில் இருந்து விலகி 'பாரத மாதா சங்கத்தை' உருவாக்கி ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார். அதற்காக நண்பர்களுடன் ரகசியக் கூட்டங்கள் நடத்தினார். ஆங்கிலேயர்களின் நெருக்கடியால் புதுச்சேரி சென்றார். அங்கு
வ.வே.சுப்பிரமணிய ஐயர், பாரதியாருடன் நெருக்கம் ஏற்பட்டது. வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தவர் வ.வே.சுப்பிரமணிய ஐயர். இந்நிலையில் வாஞ்சிநாதனுக்கு பெண்குழந்தை பிறந்து இறந்தது. வாஞ்சியின் தந்தை ரகுபதி ஐயர் புதுச்சேரிக்கு சென்று தகவல் சொன்ன போது,
“என்னால் வர முடியாது” என்றார் வாஞ்சி.
“அப்படிச் சொல்லாதேடா. உனக்குக் குழந்தை பிறந்து செத்துப் போனதற்கு நீதான் புண்ணியாகவசனம்(சடங்கு) பண்ண வேண்டும்” என்றார்.
“அப்படியா, நானும் செத்துப் போயிட்டேன்னு நினைச்சு, எங்கள் இருவருக்கும் சேர்த்து நீங்களே பண்ணுங்கள்”
“எதுக்குடா இப்படியெல்லாம் அபசகுனமா சொல்றே. நீ இப்படி எல்லாம் சொன்னால் என் மனசு தாளாதுடா. ஊருக்கு வா, தீக்ஷையை ஷவரம் பண்ணிக்க வேணும்(இறப்பு தீட்டுக்காக ேஷவிங் செய்ய வேண்டும்)”
“அப்பா, நான் இதைக் கர்ப்பதீக்ஷையாக வளர்க்கவில்லை. இந்த வெள்ளைக்காரன்களை நம் பாரத நாட்டை விட்டே துரத்தி, பாரததேசம் சுதந்திரம் அடைய வளர்த்த சுபதீக்ஷை. அதற்கான காரியம் நிறைவேறும் வரை, நான் இதை எடுக்கப் போவதில்லை. இது சத்தியம்” என ஆவேசப்பட்டார் வாஞ்சி.
இதற்கிடையில் மக்களிடம் சுதந்திர எழுச்சியை துாண்டுவதாக வ.உ.சிதம்பரனார் மீது குற்றஞ்சாட்டி சிறையில் அடைத்தார் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ். இதனால் ஆங்கிலேயரான ஆஷுக்கு பாடம் புகட்ட விரும்பினார் வாஞ்சிநாதன். இதற்காக தென்காசி திருமலை முருகன் கோயிலுக்கு பின்புறம் உள்ள காளியம்மன் சன்னதியில் நண்பர்களுடன் ஆலோசித்தார். கலெக்டர் ஆஷை சுட்டுக் கொல்ல அவர்கள் முடிவு செய்தனர் 'நானே கொல்கிறேன்' என்றார் வாஞ்சிநாதன். 'இப்போது தான் உனக்கு திருமணம் ஆகியுள்ளது. நீ வேண்டாமே' என
நண்பர்கள் தடுத்தனர். வாஞ்சிநாதன் மறுத்ததால், 'திருவுளச்சீட்டு போட்டு தெய்வத்தின் முடிவை ஏற்போம்' என்றனர்.
எல்லா சீட்டிலும் யாருக்கும் தெரியாமல் தன் பெயரை எழுதினார் வாஞ்சிநாதன். அதனால் அவருக்கே வெற்றி கிடைத்தது. மறுநாள் ஆவேசமாக, 'ஜெய் காளி! ஓம் காளி' என சொல்லியபடி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு ஓடினார். அங்கு வந்த ஆைஷ சுட்டு விட்டு தானும் வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 25. அவரின் உடலை பரிசோதனை செய்த போது ஒரு கடிதம் இருந்தது. அக்கடிதத்தில்,
'ஆங்கிலேயர்கள் நம் தேசத்தை நம்மிடம் இருந்து பறித்து, சனாதன தர்மத்தை துவம்சம் செய்கின்றனர். ஒவ்வொரு இந்தியனும் தர்மத்தையும், தேசத்தையும் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். ராமர், கிருஷ்ணர், அர்ஜுனன், வீரசிவாஜி, குருகோவிந்தர் முதலியோர் நல்லாட்சி நடத்திய இந்த தேசத்தில் அன்னியருக்கு முடி சூட்டும் முயற்சி நடக்கிறது. பாரதமாதாவின் அடிமை விலங்கு அகற்றப்பட வேண்டும்.
இதற்காக இந்திய இளைஞர்களில் கடைசியில் வாழும் அடியேன் இன்று இச்செய்கையை செய்கிறேன். இப்படிக்கு ஆர்.வாஞ்சி அய்யர்' என்றிருந்தது.
நம் நாடு சுதந்திரம் அடைந்த பின் அரசு கொடுத்த தியாகிக்கான பென்ஷனை அவரது மனைவி பொன்னம்மாள் வாங்க மறுத்தார். காரணம், 'என் கணவர் நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்தவர். அந்த தியாகத்திற்கு விலை கிடையாது' என்ற வைராக்கியத்துடன் சொன்னார்.
சுவாமி விவேகானந்தரின் வழியில் தேசியம், தெய்வீகத்தை கண்களாக போற்றியவர் முத்துராமலிங்கத் தேவர். இவரது கார் ஒரு தீபாவளியின் போது சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றது. தன்னிடம் இருந்த புடவை, பழங்களை அந்த வீட்டு பெண்ணிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கினார். பின் காரில் ஏறியதும் அவரது உதவியாளர், 'யார் இந்த பெண்மணி' என தேவரிடம் கேட்டார்.
'சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் மனைவியான இவர் நமக்கெல்லாம் தாயார்' என பதில் அளித்தார். இந்த நேரத்தில் மகாகவி பாரதியாரின் பாடல் நினைவுக்கு வருகிறது.
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?
சர்வேசா ! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரினுள்
வளர்ந்த வண்ண விளக்கிது வடியத் திருவுளமோ?
நெஞ்சகத்தே பொய்யின்றி
நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்துாய்மை காணாயோ
பொய்க்கோ உடலும்
பொருளுயிரும் வாட்டுகிறோம்?
தர்மமே வெல்லுமெனும்
சான்றோர்சொல் பொய்யாமோ?.
இன்றைய இளைஞர்களிடம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைக் கேட்டால் ஒன்றும் தெரியாமல் முழிக்கின்றனர். ஆனால் நடிகர், நடிகைகளைப் பற்றிக் கேட்டால் புள்ளி விபரங்களை அடுக்குகின்றனர். போதைப்பொருளுக்கு அடிமையாகி வேண்டாத போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலை மாறி இளைஞர்கள் நாட்டுப்பற்றுடன் வாழ்வதே வாஞ்சிநாதனுக்கு செலுத்தும் உண்மையான நன்றிக்கடன்.