ADDED : ஜூலை 21, 2016 12:03 PM
குரு பெயர்ச்சியாகும் வேளையில் தமிழகத்திலுள்ள புகழ் மிக்க சில குரு கோவில்கள் பற்றிய தகவல்கள் அளித்துள்ளோம். பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர், இந்த கோவில்களுக்குச் சென்று வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.
ஆலங்குடி ஞானகுரு: நவக்கிரக தலங்களில் குருவுக்குரியது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இங்கு குரு பகவான் சிவனை வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, ஞானம் தருபவராக வீற்றிருக்கிறார். சுந்தரர் இங்கு வந்த போது, சிவபெருமான் வெட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படச் செய்தார். ஆற்றின் மறுகரையில் நின்ற சுந்தரரிடம் வந்த ஓடக்காரர் ஒருவர், அவரை கோவிலுக்கு அழைத்து செல்வதாகக் கூறி அழைத்து வந்தார். ஆற்றின் நடுவழியில் ஓடம் கவிழும் நிலை ஏற்பட்டது. கலங்கிய சுந்தரர் சிவனை வேண்ட, அவருக்கு காட்சி தந்த சிவபெருமான், தானே ஓடக்காரராக வந்திருப்பதை உணர்த்தினார். ஞான குருவாக இருந்து உபதேசம் செய்தார். இதனால் இவருக்கு 'ஞான தட்சிணாமூர்த்தி' என்று பெயர் வந்தது. குரு பெயர்ச்சி விழா இங்கு சிறப்பாக நடக்கும்.
குருவித்துறை குரு பகவான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் அருள்பாலிக்கின்றனர். அசுர குரு சுக்கிராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரம் பற்றி அறிந்திருந்தார். அதை அறிய விரும்பிய தேவர்கள், தேவகுருவின் மகன் கசன் என்பவனை அனுப்பி வைத்தனர். சுக்கிராச்சாரியாரிடம் சென்ற கசன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு கொண்டவன் போல நடித்தான். அவள் மூலமாக சுக்கிராச்சாரியாரின் அன்பைப் பெற்ற கசன், அந்த மந்திரத்தைக் கற்றான். இதை அறிந்த அசுரர்கள் கசனை எரித்து சாம்பலாக்கி, சுக்கிராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்தனர். கசனைக் காணாமல் தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்கிராச்சாரியாரும் கசனை உயிர்ப்பித்தார். இந்த சமயத்தில் தேவகுரு, தன் மகன் கசனைக் காத்தருளும்படி பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அவர் சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்குள்ள கோவிலில் எழுந்தருளினார். குரு பகவானுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் சன்னிதிகள் உள்ளன.
அலைபேசி: 97903 55234
ராஜயோகம் தருபவர்: தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், குரு பகவான் தனி விமானத்துடன் கூடிய சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஒரு பிரளய காலத்தில் உலகமே அழிந்த போது, இங்கிருந்த ஒரு மேடான பகுதியில் சிவபெருமான், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். திட்டை என்றால் 'மேடு'. இங்குள்ள உலகாம்பிகை சன்னிதிக்கு வலதுபுறத்தில் குரு பகவானுக்கு சன்னிதி உள்ளது. இவர், ராஜ யோகம் தருபவர் என்பதால் 'ராஜகுரு' எனப்படுகிறார். கிரகங்களில் குரு பகவானே திருமண, புத்திர பாக்கியம், செல்வம் தரும் தனகாரகராக விளங்குகிறார். எனவே தடைபட்ட திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, வாழ்க்கைக்குத் தேவையான பொருள் கிடைக்க இவரிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
தொலைபேசி: 04362 - 252 858.
ஏழு குருக்களை ஒன்றாக தரிசிப்போமா!: குருமார்கள் ஏழு பேர் உள்ளனர். அவர்கள் தேவகுரு பிரகஸ்பதி, அசுரகுரு சுக்கிராச்சாரியார், ஞான குரு சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு பிரம்மா, விஷ்ணு குரு வரதராஜர், சக்தி குரு சவுந்தர்யநாயகி, சிவகுரு தட்சிணாமூர்த்தி ஆகியோர். இவர்கள் அனைவரையும், திருச்சி அருகிலுள்ள உத்தமர்கோவிலில் ஒரு சேர தரிசிக்கலாம். ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமான இக்கோவிலில், பிரம்மாவிற்கும் சன்னிதி உள்ளது. நவக்கிரக குரு பகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குருவால் உண்டாகும் கெடுபலனைக் குறைக்கும். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் காட்சி தரும் அற்புதத்தலம் இது.
தொலைபேசி: 0431 - 259 1466.
மேற்கு நோக்கி அமர்ந்தவர்: குரு பகவான் நவக்கிரக மேடையில் வடக்கு நோக்கியும், தட்சிணாமூர்த்தியாக தெற்கு நோக்கியும் இருப்பதே வழக்கம். ஆனால் சென்னை பாடியில் (திருவலிதாயம்) உள்ள வலிதாயநாதர் கோவிலில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அவர் செய்த ஒரு தவறால் தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க இத்தலத்திலுள்ள சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன்
அவருக்கு சாப விமோசனம் தந்தார். இந்த குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் விதமாக மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு. கிரக தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். சம்பந்தர், அருணகிரிநாதர், வள்ளலார் பாம்பன் சுவாமிகளால் பாடல் பெற்ற இத்தலத்தைச் சுற்றி 11 தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் இருப்பது சிறப்பு.
தொலைபேசி: 044 - 2654 0706.
வடக்கு நோக்கிய குரு: கோவில்களில் தெற்கு நோக்கி காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் அருகிலுள்ள தனிக்கோவிலில், வடக்கு பார்த்த நிலையில் இருக்கிறார். நவக்கிரக மண்டபத்தில் குரு வடக்கு நோக்கி இருப்பது வழக்கம். இங்கோ தட்சிணாமூர்த்தி வடிவில் வடக்கு நோக்கி உள்ளார். தட்சிணாமூர்த்தி அருகில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்கள் மட்டுமே இருப்பர். ஆனால் இங்கு 18 முனிவர்கள் உள்ளனர். குருதோஷ பரிகாரமாக இவரது சன்னிதியில் பக்தர்கள் அதிகளவில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இனிப்பு பதார்த்தங்கள் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அலைபேசி: 98407 97878.
காண கிடைக்காத காட்சி: நான்கு சீடர்களுடன் மட்டுமே காட்சி தரும் குரு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள திடியன் கைலாசநாதர் கோவிலில் 14 சீடர்களுடன் காட்சி தருகிறார். இவர்கள் ஆங்கீரசர், அத்திரி, காஷ்யபர், பிருகு, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், புலஸ்தியர், மரீசி, ஜமதக்னி, வசிஷ்டர், பார்கவர், மார்க்கண்டேயர், நாரதர் ஆகியோர். இவர்கள் சிவ வடிவான தட்சிணாமூர்த்தியிடம் ஞான உபதேசம் பெற்றனர். இந்தக் காட்சியே சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பில் தட்சிணாமூர்த்தியின் அமைப்பை காண்பது அரிது. மலையடிவாரத்தில் அமைந்த இக்கோவிலில், தட்சிணாமூர்த்தி நந்தி மீது இருப்பது மற்றொரு சிறப்பு.
அலைபேசி: 97919 94805
தட்சிணாமூர்த்திக்கு நெற்றிக்கண்: மகாவிஷ்ணு, ஒரு சந்தர்ப்பத்தில் தனது சக்ராயுதத்தை, ததீசி என்ற முனிவர் மீது எய்து விட்டார். இதனால் அவரது சக்கரம் பலமிழந்தது. அது மீண்டும் வலிமை பெற சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், குருவாக இருந்து அருள் புரிந்தார்.
காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணி செல்லும் வழியில், 18 கி.மீ., தூரத்தில் இத்தலம் உள்ளது.
கோவிந்தனாகிய மகாவிஷ்ணு வழிபட்டதால், இத்தலத்திற்கு கோவிந்தவாடி என்று பெயர் ஏற்பட்டது. மூலஸ்தானத்தில் தட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கி இருக்கிறார். இவருக்குப் பின்புறத்தில் கைலாசநாதர் லிங்க வடிவில் இருக்கிறார். ஒரே விமானத்தின் கீழ் சிவனும், தட்சிணாமூர்த்தியுமாக அமர்ந்த கோவில் இது. அவரது நெற்றியில் பிறை, கண் இருப்பது சிறப்பு. கங்கை சிரசில் இருக்கிறாள்.
வீணையுடன் தட்சிணாமூர்த்தி: ஊர்த்துவ ஜானு தட்சிணாமூர்த்தி என்னும் பெயர் கொண்ட தட்சிணாமூர்த்தி, கையில் வீணையுடன் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடத்தில் காட்சியளிக்கிறார். இந்த சிலையை திருவலஞ்சுழியில் கண்டெடுத்தனர். இவரது கையில் இருந்த வீணை சிதிலமாகி விட்டது. ஒரு காலை கீழே ஊன்றி, மற்றொரு காலை முயலகனின் மீது வைத்த கோலமே 'ஊர்த்துவ ஜானு' எனப்படும். மற்ற தலங்களில்
தட்சிணாமூர்த்தியின் பாதம் முயலகனின் முதுகின் மீது இருக்கும். இங்கு அவனது தலை மீது பாதம் உள்ளது.
ஜடாமுடியுடன் தட்சிணாமூர்த்தி:காஞ்சிபுரம் சத்யேனேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி ஜடாமுடியுடன் திகழ்கிறார். இவர் பட்டு வஸ்திரம் அணிந்து கால் சிலம்பு, வீரக்கழல், ஆபரணங்கள் அணிந்துள்ளார். 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரை 'ஜடாமண்டல ஞானமூர்த்தி' என்கின்றனர்.
ஒரே கோவிலில் 28 குரு கும்பகோணம் அருகிலுள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலிலுள்ள மகாமண்டபத் தூண்களில் தட்சிணாமூர்த்தியின் 28 திருவுருவங்களை தரிசிக்கலாம். இவை 28 சிவ ஆகமங்களைக் குறிக்கிறது. இவர்களில் பிரதான தட்சிணாமூர்த்தியை யோக மூர்த்தி என்கின்றனர்.
திருச்செந்தூர்: குரு கோவில்கள் என ஒருபுறம் இருக்க, குரு வழிபட்ட கோவில்களும் தமிழகத்தில் உள்ளன. அவர் முருகப்பெருமானை வழிபட்ட தலம் திருச்செந்தூர். ஆறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று. பத்மாசுரனை அழித்து தேவர்களைக் காக்க முருகப்பெருமான் இங்கு வந்தார். அப்போது அசுரர்களின் குணம் பற்றி, தேவ குருவான பிரகஸ்பதி, முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால் இது குரு தலமாக கருதப்படுகிறது. இவர் மேதா தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார். ஆமை, எட்டு நாகங்கள், எட்டு யானைகளுடன் கூடிய பீடத்தில் அமர்ந்திருக்கிறார் இவருக்கு பின்புறமுள்ள கல்லால மரத்தில், ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்கள் கிளி வடிவில் உள்ளன.
முறப்பநாடு: அகத்தியரின் சீடரான உரோமசர், தாமிரபரணி கரையில் பல இடங்களில் லிங்க வழிபாடு செய்ய விரும்பினார். இதை தனது குருவிடம் தெரிவித்து இடங்களை தேர்வு செய்து தரச்சொன்னார். அகத்தியர் அவரிடம் ஒன்பது தாமரை மலர்களைக் கொடுத்து, அவற்றை நதியில் இடும்படியும், அவை ஒதுங்கும் இடங்களில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடும்படியும் கூறினார். உரோமசரும் அவ்வாறே செய்தார். அவ்வாறு லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் பிற்காலத்தில் கோவில்கள் தோன்றின அந்த சிவாலயங்கள் கைலாயத்துக்கு ஒப்பானதாகக் கருதப்பட்டதால், 'நவ கைலாயம்' எனப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு என்ற இடத்தில் அமைந்த கைலாசநாதர் கோவில் நவக்கிரகங்களில் வியாழனுக்குரியதாக உள்ளது. இங்கு உரோமசருக்கு சிவன் குருவாக இருந்து உபதேசம் செய்தார். இங்குள்ள சிவலிங்கத்துக்கு மஞ்சள் வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலையும் சாத்தப்படுகிறது.
ஆவுடையார்கோவில்: மாணிக்கவாசகருக்கு சிவன் குருவாக இருந்து உபதேசம் செய்த தலம் ஆவுடையார்கோவில். இவ்வூரை திருப்பெருந்துறை என திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பாடுகிறார். மதுரை அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்த இவர், குரு ஒருவர் சீடர்களுக்கு உபதேசம் செய்வதைக் கண்டார். பின் மாணிக்கவாசகரும் அவரிடம் செல்ல, அவருக்கும் அந்த குரு உபதேசம் செய்தார். பின் அவரைக் காணவில்லை. சிவனே குருவாக வந்து தனக்கு உபதேசித்ததை உணர்ந்தார். எனவே இங்குள்ள குருவை 'சிவ குரு' என்பர். இங்குள்ள மூலவர் லிங்க வடிவமாக இல்லாமல் உருவமற்ற நிலையில் (அருவம்) காட்சி தருகிறார். இவருக்கு 'ஆத்மநாதர்' என்று பெயர். சிவன் குருவாக இருந்து உபதேசித்ததால், இந்தக் கோவில்
தட்சிணாமூர்த்திக்குரிய திசையான தெற்கு நோக்கி இருக்கிறது. ஆத்மநாதர் சன்னிதிக்குப் பின்புறம் உள்ள குருந்த மரத்தடியில், சிவன், மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்யும் சிற்பம் உள்ளது.

