ADDED : ஜூலை 29, 2016 10:11 AM

ஆக.5 ஆடிப்பூர குருபூஜை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள மஞ்சம்பாளையத்தில் 1876 மே 9ல் ராமலிங்கசுவாமி பிறந்தார். பெற்றோர் கந்தசாமி, அர்த்தனாரி.
பெல்லாரி அருகிலுள்ள செள்ளக்குருக்கியைச் சேர்ந்த மகான் எரிதாதா சுவாமியிடம் உபதேசம் பெற்றார். கும்பகோணம் அருகிலுள்ள பாடகச்சேரி கிராமத்தில் கிளாக்குடையார் என்னும் நிலக்கிழாரிடம் மாடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டார்.
ஒருநாள் ஒரு மரத்தின் அடியில் சுவாமியின் தலை, கை, கால்கள் தனித்தனியாக கிடப்பதைக் கண்ட நிலக்கிழார் அதிர்ச்சியடைந்தார். உடல் உறுப்புகள் தனித்தனியாக கிடக்கும் சித்துநிலையை 'நவகண்ட யோகம்' என்று சொல்வர். நிலக்கிழார் ஊருக்குள் சென்று மக்களை அழைத்து வந்தார். அதற்குள் மாடுகளை ஓட்டிக் கொண்டு சுவாமி ஊருக்குள் நுழைந்தார். இதன் பிறகே அவர் ஒரு சித்தர் என்பதை ஊரார் அறிந்தனர். ஒரு குடில் அமைத்து, அங்கு சுவாமியைத் தங்க வைத்தனர். அங்கிருந்தபடி நோயாளிகளுக்கு திருநீறும், மூலிகை மருந்தும் கொடுத்து குளத்தில் குளிக்கச்செய்து குணப்படுத்தி வந்தார்.
சுவாமியின் மகிமை அறிந்த ஆதப்பச் செட்டியார் என்ற செல்வந்தர், பாடகச்சேரிக்கு வந்து, தனக்கு இருந்த தொழுநோய் நீங்கப் பெற்றார். இதற்கு நன்றியாக பாடகச்சேரியில் மடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார்.
ஆறடி உயரமும், கரிய திருமேனியும் கொண்ட பாடகச்சேரி சுவாமி, ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தரும் அற்புதத்தை பலமுறை நிகழ்த்தியுள்ளார். ஒருநாளைக்கு மூன்று கவளம் சோறு மட்டுமே உண்பார். வடலூர் வள்ளலாரிடம் ஞான உபதேசம் பெற்றார். நாய்களின் மீது அன்பு கொண்ட இவரை 'பைரவ சித்தர்' என்றும் மக்கள் அழைத்தனர். (பைரவரின் வாகனம் நாய் என்பது குறிப்பிடத்தக்கது) பெங்களூரு ஏ.ஜி. சாமண்ணா என்னும் வணிகர், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் கடும்நோயால் அவதிப்பட்டார்.
சுவாமிகள் அவரை குணமாக்கினார். அதன் பின் தீவிர பக்தராக மாறிய சாமண்ணா, சுவாமியின் இறுதிக்காலம் வரை கூடவே இருந்தார். கும்பகோணம் கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் கோவிலில் திருப்பணி செய்த சுவாமி, 1920ல் கும்பாபிஷேகம் நடத்தினார். அங்கு கூழ் மண்டபம் என்னும் அன்னதான சாலையை நிறுவினார். 1933 முதல் 1949 வரை இங்கு பைரவ பூஜையும், அன்னதானமும் செய்து வந்தார். பாடகச்சேரி முருகன் கோவிலும், பெங்களூரு நசரத்பேட்டை சிவன்கோவிலும் சுவாமியால் கட்டப்பட்டவை. தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன், கீழவாசல் வெள்ளை விநாயகர், சென்னை கிண்டி முனீஸ்வரர் கோவில்களில் திருப்பணி செய்தார். தன் இறுதிக்காலத்தை பெங்களூருவில் கழித்த சுவாமி, 1949 ஆடிப்பூரத்தன்று சென்னை திருவொற்றியூரில் ஜீவசமாதி அடைந்தார். இவரது சமாதி பட்டினத்தார் கோவில் அருகில் உள்ளது. பாடகச்சேரியில் உள்ள கோவிலில் ஆக.5ல் பைரவ பூஜை, அன்னதானம் நடக்கிறது.
இருப்பிடம்: கும்பகோணம் மன்னார்குடி சாலையில் 10 கி.மீ., தூரத்தில் வலங்கைமான். இங்கிருந்து பிரியும் சாலையில் 4 கி.மீ., தூரத்தில் பாடகச்சேரி கிராமம் உள்ளது.

