sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சர்ப்பதோஷம் நீக்கும் கூரை நாகராஜர்

/

சர்ப்பதோஷம் நீக்கும் கூரை நாகராஜர்

சர்ப்பதோஷம் நீக்கும் கூரை நாகராஜர்

சர்ப்பதோஷம் நீக்கும் கூரை நாகராஜர்


ADDED : ஆக 05, 2016 09:27 AM

Google News

ADDED : ஆக 05, 2016 09:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராகு, கேதுவால் ஏற்படும் சர்ப்பதோஷ நிவர்த்திக்கு நாகர்கோவில் நாகராஜ சுவாமிக்கு பாலபிஷேகம் செய்து வரலாம். நாகசதுர்த்தியன்று இவரை வணங்கி வாருங்கள்.

தல வரலாறு: ஒரு பெண் வயலில் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு கதிரில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. இதைக்கண்டு பயந்தவள், ஊருக்குள் சென்று மக்களிடம் கூறினாள். அவர்கள் இங்கு வந்தபோது, நெற்கதிருக்கு கீழே நாகப்பாம்பு வடிவம் இருந்ததைக் கண்டனர். அந்த வடிவத்தை நாகராஜராகக் கருதி ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னிதி அமைத்து வழிபட்டு வந்தனர். தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட களக்காடு மன்னர் மார்த்தாண்டவர்மா இங்கு வந்தார். சுவாமியை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றார். மகிழ்ந்த மன்னர் இங்கு பெரியளவில் கோவில் எழுப்பினார். சுவாமியின் பெயரால் இந்த ஊருக்கு, 'நாகர்கோவில்' என பெயர் வந்தது. தமிழகத்தில் பாம்பை மூலவராகக் கொண்டதும், நாகர் வழிபாட்டிற்கென அமைந்த பெரிய கோவிலும் இது மட்டுமே ஆகும். இங்கு காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணர், கன்னிமூல கணபதி, நாகமணி பூதத்தான், சாஸ்தா, பாலமுருகன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

ஓலைக்கூரை சன்னிதி: மூலஸ்தானத்தில் நாகராஜர், சிறிய அளவில் ஐந்து தலைகளுடன் காட்சி தருகிறார். தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்னும் பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளன. நாகராஜர் சன்னிதி எதிரிலுள்ள தூணில், நாககன்னி சிற்ப வடிவில் இருக்கிறாள். நாகங்கள் வசிப்பதற்கேற்ப மூலஸ்தானத்தை ஓலைக்கூரையால் வேய்ந்துள்ளனர். ஆடி மாதத்தில் இதைப் பிரித்து புதிய கூரை வேய்கின்றனர். நாகராஜருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களே கூரை கட்டும் பணியைச் செய்கின்றனர்.

சர்ப்பதோஷ நிவர்த்தி: பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவைத் தாங்கும் ஆதிசேஷன், ராம அவதாரத்தின் போது லட்சுமணராக பிறந்தார். எனவே லட்சுமணரின் நட்சத்திரமான ஆயில்யத்தன்று நாகராஜாவிற்கு விசேஷ பூஜை நடக்கிறது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்நாளில் நாகராஜாவிற்கு பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொள்கிறார்கள். இதுதவிர, தினமும் காலை 10 மணிக்கு பாலபிஷேகம் நடக்கும்.

நிறம் மாறும் மணல்: மூலஸ்தானத்தில் நாகராஜர் இருக்குமிடம் மணல் திட்டாக இருக்கிறது. வயல் இருந்த இடம் என்பதால், இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணலையே பிரசாதமாகத் தருகிறார்கள். தட்சிணாயன புண்ணிய காலத்தில் (ஆடி முதல் மார்கழி வரை) இந்த மணல் கருப்பு நிறத்திலும், உத்தராயண புண்ணிய காலத்தில் (தை முதல் ஆனி வரை) வெள்ளை நிறத்திலும் இருப்பது சிறப்பு. இந்தக் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலை மோதும்.

பெருமாளுக்கு திருவிழா: நாகராஜர் சன்னிதிக்கு வலப்புறம் அனந்தகிருஷ்ணர், காசி விஸ்வநாதர் சன்னிதிகள் உள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜை செய்த பின்பு, இவர்களுக்கு பூஜை நடக்கும். அர்த்தஜாம பூஜையில் மட்டும், அனந்தகிருஷ்ணருக்கு முதல் பூஜை செய்வர். இக்கோவிலின் பிரதான மூலவர் நாகராஜர் என்றாலும், அனந்த கிருஷ்ணருக்கே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. தை மாத பிரம்மோற்ஸவம் இவருக்கே நடக்கிறது.

தைப்பூசத்தன்று இவர் தேரில் எழுந்தருளுவார். ஆயில்யத்தன்று ஆராட்டு வைபவம் நடக்கும்.

கொடிமரத்தில் ஆமை: பெருமாள் கோவில் கொடிமரங்களின் உச்சியில், கருடனை வடிவமைப்பர். இங்குள்ள அனந்த கிருஷ்ணர் சன்னிதி கொடிமரத்தில் கருடனுக்குப் பதிலாக ஆமையை வடித்துள்ளனர். பாம்பும், கருடனும் விரோதிகள் என்பதால் கருடனுக்குப் பதிலாக ஆமையை வடித்துள்ளனர். விசேஷ காலங்களிலும், மாதாந்திர ஆயில்ய நட்சத்திர நாட்களிலும் அனந்தகிருஷ்ணர் ஆமை வாகனத்திலேயே புறப்பாடாகிறார். தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தபோது, மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்ததன் அடிப்படையில் ஆமையை வடிவமைத்துள்ளனர்.

மகாமேரு மாளிகை: இது கிழக்கு நோக்கிய கோவில் என்றாலும், தெற்கு வாசலே பிரதானமாக இருக்கிறது. இந்த வாசலை, 'மகாமேரு மாளிகை' என்கிறார்கள். மாளிகை வடிவில் உயரமாக அமைந்த வாசல் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. நாகராஜர் சன்னிதியின் இடப்புறம் நாகர் தீர்த்தம் இருக்கிறது. வெளிப்பிரகாரத்தில் நாகலிங்க மரம் உள்ளது. இதில் பூக்கும் பூவை நாகராஜரின் குறியீடாகக் கருதி வழிபடுகிறார்கள்.

அம்மச்சி துர்க்கை: ராகுவுக்குரிய தெய்வம் துர்க்கை. இங்குள்ள துர்க்கை, நாகர் தீர்த்தக் குளத்தில் கிடைத்ததால் இவளை 'தீர்த்த துர்க்கை' என்கிறார்கள். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் நாகராஜரையும், இவளையும் வழிபடுகிறார்கள். வயது முதிர்ந்த பெண்களை 'அம்மச்சி' என்று மலையாளத்தில் அழைப்பது வழக்கம். இந்த துர்க்கையையும், தங்களுக்கு வழிகாட்டும் பெரியவளாகக் கருதி, 'அம்மச்சி துர்க்கை' என்கிறார்கள்.

இருப்பிடம்: நாகர்கோவில் - வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ.

நேரம் : காலை 4.00 - 11.30, மாலை 5.00 - இரவு 8.30 மணி.

அலை/தொலைபேசி: 94439 92216, 04652- 232 420.






      Dinamalar
      Follow us