sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

128 பேர் சுமக்கும் கனமான கல்கருடன்

/

128 பேர் சுமக்கும் கனமான கல்கருடன்

128 பேர் சுமக்கும் கனமான கல்கருடன்

128 பேர் சுமக்கும் கனமான கல்கருடன்


ADDED : ஆக 05, 2016 09:33 AM

Google News

ADDED : ஆக 05, 2016 09:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலிலுள்ள கல் கருடன், 128 பேர் சுமந்து செல்லும் அளவுக்கு கனம் கொண்டது. கருட ஜெயந்தியை ஒட்டி இந்தக் கோவிலுக்கு சென்று வாருங்கள்.

தல வரலாறு: மேதாவி மகரிஷி விஷ்ணுவைத் தன் மருமகனாக அடைய விரும்பி தவமிருந்தார். அவரது பக்தி கண்டு மகிழ்ந்த மகாலட்சுமி, பங்குனி உத்திர நன்னாளில் இத்தலத்திலுள்ள மகிழ மரத்தடியில் சிறுமியாகத் தோன்றினாள். அவளுக்கு 'வஞ்சுளா தேவி' எனப் பெயரிட்டு மகரிஷி வளர்த்தார். மகாவிஷ்ணு அவளை மணம் புரிவதற்காக, சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருதன், புருஷோத்தமன், வாசுதேவன் என்னும் ஐந்து வடிவங்களில் பூலோகத்திற்கு வந்தார். அவர்களுடன் வந்த கருடாழ்வார், முனிவரின் ஆஸ்ரமத்தில் லட்சுமி இருப்பது கண்டு விஷ்ணுவிடம் தெரிவித்தார்.

விஷ்ணுவும் மகரிஷியிடம் வஞ்சுளா தேவியை பெண் கேட்க, “தாங்கள் என் மகளை மணம் செய்ய விரும்பினால் நீங்கள் அவள் சொல் கேட்டுத் தான் நடக்க வேண்டும்,” என நிபந்தனை விதித்தார். விஷ்ணுவும் சம்மதிக்க, கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது விஷ்ணு கருடாழ்வாரிடம், “நான் இங்கு மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே எனக்குப் பதிலாக நீயே இங்கிருந்து, நான் பக்தர்களுக்கு அருள்வது போல வரம் தர வேண்டும்,” என்றார். அதன்பின், கருடாழ்வாரே பிரதான மூர்த்தியாக வீற்றிருக்கத் தொடங்கினார்.

இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் என்பதால் அவளது பெயரால் இத்தலம் 'நாச்சியார் கோவில்' எனப்படுகிறது.

கல் கருடசேவை: கருடாழ்வார் தனிச் சன்னிதியில் ஒன்பது நாகங்களுடன் அருள்பாலிக்கிறார். இவர் கல்லால் உருவாக்கப்பட்டவர். ஆறுகால பூஜையின் போது இவருக்கு மோதகம் நைவேத்யம் செய்யப்படுகிறது. இங்கு வைகுண்ட ஏகாதசிக்கு நான்கு நாள் முன்னதாகவும், பங்குனி பவுர்ணமிக்கு ஐந்து நாள் முன்னதாகவும் கருடசேவை நடக்கும். அப்போது கற்சிலையான மூலவரையே வீதியுலாவாக எடுத்துச் செல்வர். இவரை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும் போது முதலில் நான்கு பேர் சுமந்து வருவர். சற்றுதூரம் சென்றதும் கனம் கூடும். அப்போது 8 பேர் தூக்குவர். இப்படியே கனம் கூடக்கூட 16, 32 எனப்பெருகி இறுதியில் 128பேர் இவரைச் சுமந்து செல்வர். இவர் வெளியிலிருந்து மீண்டும் கருவறை நோக்கி வரும் போது அதே எண்ணிக்கையில் ஆட்களின் தேவை குறைந்து விடுகிறது. இது கலியுக அதிசயமாகும். திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்க வியாழக்கிழமையில் கருடாழ்வாருக்கு வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர். வரும் ஆக.10 ஆடி சுவாதியன்று கருடாழ்வாருக்கு அவதார நட்சத்திர நாளாகும். அன்று அவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

சாவி கொத்துடன் தாயார்: சுவாமி வீதியுலாவின் போது தாயார் முன் செல்ல, பெருமாள் பின் தொடர்கிறார். தாயாரே அனைத்தையும் நிர்வகிக்கிறாள் என்பதை உணர்த்தும் விதத்தில் உற்சவ தாயாரின் இடுப்பில் சாவிக்கொத்து வைக்கப்படும். இத்தலத்தின் பெயரும், கோவில் கருவறையும் வஞ்சுளவல்லித் தாயாரை மையப்படுத்தியே உள்ளது. பெருமாளுக்கு திருநறையூர் நம்பி என்பது திருநாமம். உற்ஸவரை இடர் கடுத்த திருவாளன் என்கின்றனர். சக்கரத்தாழ்வார் சன்னிதி இங்குள்ளது. தலவிருட்சமும் தாயார் பெயரால் வகுளம் (மகிழமரம்) எனப்படுகிறது.

ஆச்சார்யனாக பெருமாள்: நீலன் எனும் குறுநிலமன்னனான திருமங்கையாழ்வார் தன் பணத்தை இறைப்பணிக்கே செலவிட்டார். வைணவர் அல்லாத இவரை யாரும் ஏற்கவில்லை. மனம் வருந்திய அவர் பெருமாளிடம் தன்னை ஏற்கும் படி வேண்டினார். பெருமாளும் மனம் இரங்கி ஆச்சாரியனாக இத்தலத்தில் தோன்றி ஆழ்வாருக்கு 'முத்ராதானம்' செய்தார். முத்ராதானம் என்பது கைகளில் சங்கு, சக்கரத்தை முத்திரை பதிப்பதாகும். திருமங்கையாழ்வார் இங்கு 100 பாசுரங்களுக்கு மேல் பாடி சுவாமியை, 'நம்பி' என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார். நம்பி என்பதற்கு நற்குணம் நிறைந்தவர்' என்று பொருள்.

சோழன் கட்டிய கோவில்: நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கட்சோழன் 70 சிவன் கோவில்கள் கட்டினார். ஆனால் இவருக்கு வைகுண்டம் செல்ல ஆசை ஏற்பட்டதால் பெருமாளையும் வேண்டினார். காட்சி தந்த பெருமாள் இத்தலத்தில் கோவில் கட்ட உத்தர விட்டார். சோழனும் சிவன் கோவில் அமைப்பில் யாளிகளுடன், மாடக்கோவில் அமைப்பில் கட்டினார்.

இருப்பிடம்: கும்பகோணம் - திருவாரூர் சாலையில் 10 கி.மீ.,

நேரம்: காலை 7.30 - 12.30, மாலை 4.30 - இரவு 9.00 மணி.

அலை/தொலைபேசி: 94435 97388, 0435 - 246 7017.






      Dinamalar
      Follow us