/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடக்கணுமா?
/
பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடக்கணுமா?
ADDED : நவ 13, 2016 12:25 PM

காதல் திருமணமே என்றாலும் அது பெற்றவர்கள் சம்மதத்துடன் நடக்க வேண்டும். அவர்களின் சம்மதத்தை பெற காதலர்கள் வணங்க வேண்டிய கோவில் நாகபட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் உள்ளது. இங்கு சிவன் உத்தவேதீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு: பார்வதி தேவி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டுமென பரதமாமுனிவர் தவம் இருந்தார். அதை ஏற்ற சிவன் முனிவரின் யாக குண்டத்தில் பார்வதியை குழந்தையாகப் பிறக்கச் செய்தார். சிவபக்தையாக விளங்கிய அவள், சிவனையே கணவனாக அடைய விரும்பி அவர் மீது காதல் கொண்டாள். மணலில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு வந்தாள். ஒருநாள் சிவன் நேரில் தோன்றி பார்வதியின் கைகளைப் பற்றி தன்னுடன் வரும்படி அழைத்தார்.
பார்வதி சிவனிடம்,“ சுவாமி... நான் தங்களை விரும்புவது உண்மையே. இருப்பினும் என் தந்தையின் சம்மதத்தை முதலில் பெறுங்கள். அதன்பின் திருமணம் செய்து கொள்ளலாம்,” என்றாள். இதைக் கேட்ட சிவன் அங்கிருந்து மறைந்தார். சில காலம் கழிந்ததும் நந்தீஸ்வரரை மணம் பேசி முடிக்க முனிவரிடம் தூது அனுப்பினார். பரதமாமுனிவரும் மகிழ்வுடன் சம்மதிக்க, திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது.
மணமகள் இருப்பிடமான குத்தாலத்தில் திருமணம் சிறப்பாக நடந்தது. இதன் அடிப்படையில் இத்தலத்தில் சிவனுக்கு கோவில் அமைக்கப்பட்டது.
ஊர்ப்பெயர் காரணம்: அம்பிகை அரும்பன்ன வனமுலைநாயகி தனி சன்னிதியில் வீற்றிருக்கிறாள். இவளுக்கு அமிர்த முகிழாம்பிகை என்றும் பெயருண்டு. சிவன் இத்தலத்திற்கு திருமணத்துக்காக வந்த போது பாதுகை அணிந்து வந்தார். மேலும் அவருக்கு நிழல் தருவதற்காக கைலாயத்தில் இருந்து
உத்தாலம் என்ற மரமும் கூடவே வந்தது. அந்த மரமே தல விருட்சமாக உள்ளது. உத்தாலம் என்பதே தற்போது 'குத்தாலம்' என வழங்கப்படுகிறது. திருமணத்தலமான இங்கு வழிபட்டால் திருமணயோகம் விரைவில் கைகூடும். காதல் திருமணம் செய்ய விரும்புவோர் தங்கள் இருப்பிடத்தில்
இருந்தபடியே இந்த சிவனையும், அம்பாளையும் மனதார நினைக்க வேண்டும். திருமணம் கை கூடியதும் இங்கு வந்து தம்பதி சமேதராக வழிபடுவதாக வேண்டிக் கொள்ளலாம். சிவனது பாதுகைகள் உத்தால மரத்தின் அடியில் உள்ளன.
தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இது 100 வது தலம். பதும, சுந்தர, காவிரி, வடகுளம் ஆகிய தீர்த்தங்கள் இங்குள்ளன. சப்தரிஷிகளான காஷ்யபர், ஆங்கிரசர்,
கவுதமர், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகியோர் இங்கு வழிபட்டு நற்பேறு பெற்றனர். அக்னி தேவன் தனக்கு நேர்ந்த பழி தீர சிவபூஜை செய்துள்ளான். விக்ரம சோழ மன்னனின் மனைவி கோமளைக்கு, இத்தலத்து சிவனருளால் குஷ்டநோய் தீர்ந்தது.
காசிக்கு சமம்: உருத்திரசன்மன் என்பவன் முக்தி பெற காசிக்கு சென்றான். குத்தாலமும் காசிக்கு சமமான தலம் என்பதை அவனுக்கு உணர்த்த சிவன் விரும்பினார்.
குண்டோதரனை அழைத்து, “நீ பாம்பு வடிவம் எடுத்து உருத்திரசன்மனை காசிக்கு செல்ல விடாமல் தடுத்திடு,” என்றார்.
குண்டோதரனும் தடுத்தான். உருத்திரசன்மன் கருட மந்திரத்தை உச்சரிக்க, பாம்பு மயக்கம் அடைந்தது. சிவனே பாம்பாட்டியாக தோன்றினார். பாம்பாட்டியாக வந்திருப்பது சிவன் என்பதை உருத்திரசன்மன் உணர்ந்து கொண்டான். அவனிடம் சிவன், “குத்தாலத்தை தரிசித்தாலே காசியை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்,” என்று கூறி வழிகாட்டினார். அதன்படி வழிபட்டு அவன் முக்தி அடைந்தான்.
இங்கு வீணை இசைக்கும் தட்சிணாமூர்த்தியின் அபூர்வ சிற்பத்தை தரிசிக்கலாம். இவரை கிளி வடிவம் கொண்ட சுகபிரம்மரும், குதிரை முகம் கொண்ட தும்புருவும் வணங்கிய நிலையில் உள்ளனர்.
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - மதியம் 12: 30 மணி, மாலை 5:00 - இரவு 9:00 மணி
அலைபேசி: 94878 83800

