/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
திதி கொடுக்க திருப்புவனம் வாங்க!
/
திதி கொடுக்க திருப்புவனம் வாங்க!
ADDED : செப் 23, 2016 10:35 AM

செப்.30 மகாளய அமாவாசை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பூவணநாத சுவாமி கோவில் அமாவாசைக்குரிய சிறப்பு தலமாக உள்ளது. பிதுர் மோட்சபுரம் எனப்படும் இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுக்கின்றனர்.
தல வரலாறு: காசியைச் சேர்ந்த தர்மயக்ஞன், தன் தந்தையின் அஸ்தியை கரைக்க நண்பனுடன் ராமேஸ்வரம் சென்றான். வழியில் திருப்புவனத்தில் தங்கி ஓய்வெடுத்தான். தற்செயலாக நண்பன் அஸ்தி கலசத்தை திறந்த போது, அது பூவாக மாறி இருந்தது. ஆனால் இதை தர்மயக்ஞனிடம் சொல்வில்லை.
ராமேஸ்வரம் சென்று, கடலில் அஸ்தியை கரைக்க கலசத்தை திறந்த போது, மீண்டும் அஸ்தியாக மாறி இருந்தது. வியப்படைந்த நண்பன், திருப்புவனத்தில் தான் கண்டதை தர்மயக்ஞனிடம் தெரிவித்தான். அவர்கள் மீண்டும் அஸ்தியுடன் திருப்புவனம் வந்தனர். அஸ்தி மீண்டும் பூவாக மாறியது. அஸ்தி இங்கு பூவாக மாறியதால், காசியை விட இத்தலம் புனிதமானது என்ற உண்மையை உணர்ந்தனர். அஸ்தி பூவாக மாறியதால் 'திருப்பூவனம்' என்று அழைக்கப்பட்ட இவ்வூர், திருப்புவனம் என மாறியது. காசி செல்ல முடியாதவர்கள், இங்குள்ள வைகையாற்றில் முன்னோர் வழிபாடு செய்கின்றனர்.
சித்தராக வந்த சிவன்: திருப்புவனத்தில் பொன்னனையாள் என்ற நடன மங்கை வாழ்ந்தாள். சிவபக்தையான அவள், பூவணநாதருக்கு தங்கச்சிலை வடிக்க விரும்பினாள். இதை நிறைவேற்ற சிவன் சித்தர் வடிவில் தோன்றினார். பொன்னனையாளின் வீட்டிலுள்ள பாத்திரங்களை நெருப்பில் இட்டால், தங்கமாக மாறும் என கூறினார். பொன்னனையாளும் அவ்வாறே செய்ய அவை தங்கமாக மாறின. அதைக் கொண்டு பூவணநாதர் சிலையை உருவாக்கினாள். அந்த சிலையின் அழகில் சொக்கி, அதன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள். அப்போது பதிந்த நகக்குறியை இந்த சிலையில் காணலாம்.
வழி விட்ட நந்தி: இங்கு புஷ்பவனேஸ்வரர் என்னும் திருநாமத்துடன் சுயம்பு மூர்த்தியாக திரிசூல முத்திரையுடன் சிவன் அருள்பாலிக்கிறார். இவருக்கு பூவணநாதர் என்று பெயர். சிவனுக்கு வலப்புறத்தில் சவுந்தரநாயகி, மின்னனையாள் ஆகிய அம்மன்களின் சன்னிதிகள் உள்ளன. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. தலவிருட்சம் பலாமரம். ஞானசம்பந்தருக்காக இங்குள்ள நந்தி சற்று விலகி நின்று வழிவிட்டதாக தலவரலாறு கூறுகிறது.
புஷ்பவன காசி, பிதுர்மோட்சபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரமபுரம், ரசவாதபுரம் என்றும் இத்தலத்திற்கு பெயருண்டு. வைகை உள்ளிட்ட ஐந்து தீர்த்தங்கள் இங்குள்ளன. இதில் மணிகர்ணிகை தீர்த்தம் சிறப்பு மிக்கது. இதில் நீராடியே அகத்தியர் கடல் நீரை பருகும் சக்தி பெற்றார்.
இருப்பிடம் : மதுரை - ராமேஸ்வரம் சாலையில் 18 கி.மீ.,
நேரம் : காலை 7:00 - பகல் 1:00, மாலை 4:30 - இரவு 8:30 மணி
அலைபேசி: 94424 95393

