
சக்தி பீடங்களில் ஒன்றான காமாக்யா கோயில் அசாமில் உள்ள நிலாச்சல் மலையில் உள்ளது. சுற்றுலா தலமான இதை தரிசித்தால் உங்களின் விருப்பம் நிறைவேறும்.
பார்வதியை குழந்தையாக பெற்ற தட்சன், அவளுக்கு தாட்சாயிணி என பெயரிட்டு வளர்த்தான். அவளை சிவபெருமான் திருமணம் புரிந்தார்.
தட்சன் ஒருமுறை தேவர்களை அழைத்து யாகம் நடத்தினான். அதற்கு மருமகனான சிவனை அழைக்கவில்லை. இதனால் தாட்சாயிணி கோபம் அடைந்து, தந்தையிடம் நியாயம் கேட்க அவளை அவமானப்படுத்தினான். அவள் யாகத்தீயில் உயிரை விட்டாள். கோபம் கொண்ட சிவனின் நெற்றியில் அரும்பிய வியர்வையில் இருந்து வீரபத்திரர் தோன்றி தட்சனை அழித்தார். மனைவியின் உடலைச் சுமந்தபடி சிவன் அலைந்தார். இதை தடுக்க எண்ணிய திருமால் சக்கராயுதத்தை ஏவி தாட்சாயிணியின் உடலைத் தகர்த்தார்.
அவளின் உடலிலுள்ள பாகங்கள் பூமியில் பல இடங்களில் சிதறின. அந்த தலங்களே சக்தி பீடங்களாகத் திகழ்கின்றன. இதில் பிறப்பு உறுப்பான யோனி விழுந்த இடம் காமாக்யா கோயில்.
கோச் வம்ச மன்னரான நர நாராயணனால் இக்கோயில் கட்டப்பட்டது. குகை வடிவில் உள்ள கருவறையைச் சுற்றி உமாகமலேஷ்வர் என்னும் இயற்கை நீரூற்று ஓடுகிறது. இதை பிரசாதமாக தருகின்றனர். 'காமாக்யா' என்றால் 'விருப்பத்தை நிறைவேற்றுபவள். மாதவிடாய் என்னும் தீட்டுக் காலத்தில் ரத்தம் போல சிவப்பாக தீர்த்தம் மாறும் அதிசயம் இங்கு நடக்கிறது.
இங்குள்ள மங்கள சண்டி, அன்னபூரணி, நீலகண்ட மகாதேவ், மானசாதேவி சிற்பங்கள் கலைநயம் மிக்கவை. அனுமன், பைரவர் சன்னதிகள் உள்ளன. யோனி பீடம், காமகிரி பீடம், காமரூப் என்றும் இக்கோயிலை அழைக்கின்றனர்.
எப்படி செல்வது : அசாம் தலைநகரான கவுகாத்தியில் இருந்து 40 கி.மீ.,
விசேஷ நாள்: அம்புபாச்சி மேளா, மானசா பூஜை, துர்கா பூஜை
நேரம்: அதிகாலை 5:30 - 1:00 மணி; மதியம் 2:30 - 6:00 மணி
தொடர்புக்கு: 0361 -- 273 4624
அருகிலுள்ள கோயில்: கேதாரேஸ்வர் மந்திர் 33 கி.மீ., (மனபலம் அதிகரிக்க...)
நேரம்: காலை 8:00 - மாலை 5:30 மணி
தொடர்புக்கு: 0361 - 268 4404