
ஒரு கிராமத்தில் தொழுநோயாளி, வழுக்கை தலையுடையவர், கண் தெரியாதவர் மூவரையும் ஒதுக்கி வைத்திருந்தனர். இறைவனிடம் தன் குறைகளை சரி செய்ய அவர்கள் வேண்டினர். ஒரு நாள் இறைவனின் கட்டளைப்படி வானத்தில் இருந்து இறங்கிய தேவதை அவர்கள் குறைகளை நீக்கி அவர்களுக்கு தனித்தனியாக ஒட்டகம், மாடு, ஆடு ஒவ்வொன்றை பரிசாக வழங்கியது. அதன் மூலம் அவர்கள் நல்ல நிலைக்கு வந்தனர்.
ஒரு நாள் தேவதை மனித வடிவில், முதலாமானவரிடம் சென்று ஒரு ஒட்டகம் தாருங்கள் அதனை சில நாளில் திரும்பி தருகிறேன் என கேட்டது. எல்லாம் எனது முன்னோர்களுடையது அதனால் தர இயலாது என்றார் அவர். இரண்டாமானவரிடமும் அதைப்போலவே கேட்க, எல்லாம் நான் சுயமாக சம்பாத்யம் செய்தது. அதனால் தர மாட்டேன் என்றார். மூன்றாமானவரிடம் சென்று அதைப்போலவே கேட்க, அவர் நான் கண் தெரியாமல் இருக்கும் போது எனக்கு கண்ணையும் கொடுத்து ஒரு ஆட்டினையும் கொடுத்தான் இறைவன். அதன் மூலம் பெருகியது தான் இந்த ஆடுகள். அதனால் உமக்கு இரண்டு ஆடுகள் தருகிறேன். திருப்பித்தர வேண்டாம். இவை அனைத்தும் அவன் கொடுத்தது என்றார். தேவதை அவருக்கு முத்துமாலையை பரிசாக தந்தது. உண்மையாக வாழ்ந்தால் உயர்வு உண்டு என்பதே நியதி.

