கூடுதலாக ஒரு காட்சி: அரசு உத்தரவால் சினிமாவுக்கு லாபமா?
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றபின் தவெக அரசு சினிமாதுறைக்கு முதல் உத்தரவாக, இனி புதுப்படங்கள் முதல் 7 நாட்கள் 5 காட்சிகளை நடத்தலாம். உள்ளூர் பண்டிக்கை நாட்களிலும் கூடுதல் 1 காட்சி நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளது. இதனால், சினிமாவுக்கு பலன் கிடைக்குமா என்று விசாரித்தால், இப்போது சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் 5 காட்சிகள் நடத்த உத்தரவு உள்ளது. இப்போது மற்ற நாட்களிலும், அதாவது படம் வெளியான முதல் 7 நாட்கள் 5 காட்சிகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இது நல்ல விஷயம் என்றாலும், இந்த உத்தரவால் சில பெரிய படங்கள் மட்டுமே பலன் அடையும். ரஜினி,கமல், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஹீரோக்களுக்கு மட்டுமே இந்த உத்தரவால் லாபம். மற்ற ஹீரோக்களின் படங்கள் முதல் 7 நாட்கள் 5 காட்சிகள் என்பதால் பலன் இல்லை. அந்த அளவுக்கு கூட்டம் வராது. சின்ன படங்கள் சில நாட்கள், சில காட்சிகள் ஓடுவது அபூர்வம். இந்த உத்தரவால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை.
இந்த உத்தரவு மாற்று மொழி படங்களுக்கு பொருந்துமா என தெரியவில்லை. அதற்கும் ஓகே என்றால், இந்தியில், தெலுங்கில், மலையாளம், கன்னடத்தில் ஹிட்டாகும் படங்கள் தமிழில் கூடுதலாக காட்சிகளை இயக்கலாம். ஆனால், அப்படி செய்தால் தமிழ் படங்களுக்கு பாதிப்பு ஏற்படும். தமிழ் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத சூழ்நிலை உருவாகும்.
தவிர, தியேட்டர் டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அவர்கள் 450, 300 வரை டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று அரசிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள். அதை ஏற்று தமிழக அரசு டிக்கெட் விலையை உயர்த்தினால், அது சினிமாவுக்கு பெரிய இழப்பாக அமையும். தியேட்டருக்கு படம் பார்க்க வருபவர்கள் எண்ணிக்கை இன்னும் குறையும். படங்களில் தோல்வி அதிகரிக்கும் என்றும் கூறுகிறரா்கள்.