என் இனிய தமிழ் மக்களே... பாரதிராஜா ஹைலைட்ஸ்
இயற்கையோடு பின்னிப் பிணைந்த கிராம வாழ்க்கையின் எதார்த்தத்தையும், அந்த மண்ணோடு பிறந்து வளர்ந்த மனித உறவுகளின் மகத்துவத்தையும், மயிலிறகால் வருடியது போல் நம் மனதிற்கு நெருக்கமாகவும், இதமாகவும் தந்து, மாறுபட்ட சிந்தனையோடு, மகத்தான கலைப்படைப்புகள் உருவாக வழிவகுத்தவர் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா. படங்களின் துவக்கத்திலும் சரி, தான் மேடைகளில் பேசும்போது சரி என் இனிய தமிழ் மக்களே... என சொல்லிவிட்டு தான் ஆரம்பிப்பார்.
2. கதாநாயகன் யார்? எனக் கேட்டு படம் பார்த்து வந்த நம் தமிழ் திரைப்பட ரசிகனை, இயக்குநர் யார்? எனக் கேட்க வைத்த பெருமைக்குரிய இயக்குநராக
பார்க்கப்பட்டு வந்தவர்தான் இயக்குநர் பாரதிராஜா.
3. “16 வயதினிலே”, “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “புதிய வார்ப்புகள்”, “நிறம் மாறாத பூக்கள்” என இளையராஜாவுடன் இணைந்து தொடர் வெற்றித் திரைப்படங்களை தந்து கொண்டிருந்த இவரது ஆறாவது கலைப்படைப்பாக வந்த திரைப்படம்தான் “நிழல்கள்”. இத்திரைப்படத்தின் பாடல்கள் பெற்ற வெற்றியைப் படம் பெற தவறியது. இதுதான் இவரது முதல் தோல்விப் படமாகவும் அமைந்திருந்தது.
4. தமிழில் இவரது பெரும்பாலான திரைப்படங்களுக்கு இசை வடிவம் தந்தது 'இசைஞானி' இளையராஜா. “16 வயதினிலே”, “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “புதிய வார்ப்புகள்”, “நிறம் மாறாத பூக்கள்”, “நிழல்கள்”, “அலைகள் ஓய்வதில்லை”, “டிக்…டிக்…டிக்…”, “காதல் ஓவியம்”, “மண்வாசனை”, “புதுமைப் பெண்”, “முதல் மரியாதை”, “கடலோரக் கவிதைகள்”, “நாடோடித் தென்றல்” என இளையராஜாவின் இசையில் வெளிவந்த இத்திரைப்படங்களில் எல்லாம், பாரதிராஜா வசனங்களால் சொல்ல நினைத்த சில இடங்களையும், காட்சிகளால் உணர்த்த நினைத்த சில இடங்களையும் இசையின் மூலம் பேசியும், உணர்த்தியும் இருப்பார் 'இசைஞானி' இளையராஜா. அந்த அளவிற்கு பாரதிராஜா, இளையராஜா என்ற அந்த இருபெறும் ஆளுமைகளின் புரிதல்கள் அவர்களது கலைப் படைப்புகளில் வெளிப்பட்டிருப்பதை கடைக்கோடி திரை ரசிகனாலும் காண இயலும்.
5. பாரதிராஜாவின் திரைவரிசை என்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரமாக மின்னிய ஒரு திரைக்காவியம் தான் “முதல் மரியாதை”. இத்திரைப்படத்தின்
பாடல்கள் மற்றும் பின்னணி இசை, படம் பார்ப்போரின் மனங்களை உருகச் செய்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் இந்தப்படம் பிடிக்காமல் போய், பின் தனக்கிருந்த தயக்கங்களையும் மீறி, ஒரு இசை ராஜாங்கத்தையே அமைத்திருப்பார் இளையராஜா. படத்தின் உயிர் மூச்சே 'இசைஞானி' இளையராஜாவின் பின்னணி இசை என்றால் அது மிகையன்று. பாரதிராஜா, இளையராஜா என்ற இவ்விருவரும் இணைந்து தந்த திரைப்படங்கள் எல்லாம் தமிழ் திரையுலகின் தனிப்பெரும் திரைக் காவியங்களாகவே பார்க்கப்பட்டது என்பதுதான் உண்மை.
6. பாரதிராஜா மற்றும் இளையராஜா என்ற இந்த மாபெரும் கூட்டணியின் இறுதித் திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் 'நாடோடித் தென்றல்”. இத்திரைப்படத்திற்குப் பின் பாரதிராஜாவின் திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. காலம் கடந்தும் பேசப்பட்டு வந்த அந்தக் காவியப் படைப்புகளின் பயணம் மேலும் தொடராமல் முற்றுப் பெற்றது திரைத்துறைக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த கலைத்துறைக்கே பேரிழப்பு என்பதுதான் உண்மை.
7. அதன்பின் வந்த தேவேந்திரன், அம்சலேகா, ஏ ஆர் ரஹ்மான், வித்யாசாகர், தேவா ஆகியோரின் இசையிலும் தனது ஆகச் சிறந்த கலைப்படைப்புகளைத் தந்த வண்ணமே இருந்தார் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா. “வேதம் புதிது”, “கிழக்குச் சீமையிலே”, “கருத்தம்மா” போன்ற திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
8. நடிக்கும் ஆசை கொண்டு கலைத்துறையில் கால் பதிக்க நினைத்திருந்த இயக்குநர் பாரதிராஜா, பின்னாளில் பல திறமைமிகு நடிகர்களை இந்தக் கலைத்துறைக்கு அற்பணிக்கும் ஒரு ஆற்றல்மிகு இயக்குநராக அடையாளம் காணப்பட்டு, கலைத்துறையினராலும், ரசிகப் பெருமக்களாலும் ஆராதிக்கப்பட்டார். ராதிகா, ரத்தி அக்னிஹோத்ரி, ராதா, ரேவதி என 80களின் உச்ச நாயகியராக இருந்த பல நடிகைகள் இவரால் கலையுலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்கள்.
9. தமிழ் திரையுலகின் தனிப்பெரும் ஆளுமைகளில் ஒருவராக பார்க்கப்படும் இயக்குநர் பாரதிராஜா, இந்தியத் திரையுலக அரங்கத்திற்குள் தமிழுக்கென ஒரு தனி சிம்மாசனம் தனது ஆகச் சிறந்த கலைபடைப்புகளால் அமைத்துத் தந்தார்.
10. டி சர்ட், ஜீன்ஸ் சகிதமாய், அனைத்து வித கலை மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து, ஒரு உற்சாகமிகு இளைஞனைப் போல தனது கருத்துக்களையும், எண்ணங்களையும் விருப்பு வெறுப்பின்றி பதிவு செய்து, வளர்ந்து வரும் கலையுலக இளைய சமுதாயத்திற்கு ஒரு முன்னுதாரணமாக, வழிகாட்டியாக வாழ்ந்து வந்த இயக்குநர் பாரதிராஜாவிற்கு தனது ஒரே மகன் மனோஜின் மறைவு, அவருக்கு மனதளவிலும், உடலளவிலும் பலவீனத்தைத் தந்து, இன்று இந்த பூவுலகிலிருந்தும், கலையுலகிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார். 'என் இனிய தமிழ் மக்களே' என்ற அந்த கணீர் குரல் இன்று தன் ஒலியை மறந்து ஒளியாக விண்ணில் மறைந்தது.