சோசியல் மீடியாவை நிர்வகிப்பதை அட்மின் வசமிடமிருந்து தன்னிடம் மாற்றிக்கொண்ட கங்கனா
பாலிவுட் நடிகையும் எம்.பி.,யுமான கங்கனா ரணாவத் நடிப்பில் அடுத்ததாக 'பாரத் பாக்ய விதாதா' என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கங்கனா மும்பையில் ஒரு பிரபல மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஜூன் 12ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில், இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் கங்கனா. அப்போது ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, சமீப காலமாக தனது சோசியல் மீடியா கணக்குகளை தனது நிர்வாக குழுவிடம் இருந்து பறித்து தானே நிர்வகிப்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து கங்கனா கூறும்போது, “எனது சமூக ஊடக குழு எழுதிய பதிவுகளைக் கண்டு பலமுறை அதிர்ச்சி அடைந்தேன். என்ன இது, ஏதோ பள்ளி தலைமை ஆசிரியருக்கு மரியாதையோடு கடிதம் எழுதுவது போல கேப்ஷன்களை எழுதியிருக்கிறீர்கள்? இதைப் பார்த்தால் நாம் உயிரோடு இருப்பதற்காக யாரிடமாவது மன்னிப்பு கேட்பது போல இருக்கிறது என்று அவர்களிடம் கூறிவிட்டேன். எதையும் ஒளிவு மறைவின்றி உண்மையாக, எளிமையாகச் சொல்ல வேண்டும். நான் இதைச் சாப்பிடுகிறேன் என்றால் அதை அப்படியே சாதாரணமாக எழுத வேண்டுமே தவிர, ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் ஏதோ மன்னிப்பு கேட்பது போன்ற தொனியில் பதிவிடுவது சரியாக வராது” என்றும் அவர் கூறியுள்ளார்.