வாக்காளர் அட்டை மோசடி : பிரகாஷ்ராஜிற்கு பிடிவாரண்ட்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி குணசித்ர மற்றும் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் மீது வாக்காளர் அடையாள அட்டை மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் தனது பெயரில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும்.
இதுகுறித்து பெங்களூருவை சேர்ந்த வக்கீலான திலீப்குமார் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார் அளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை இதை தொடர்ந்து அவர் மீது பெங்களூரு 48-வது கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டுட் கோர்ட்டில் திலீப்குமார் தனிநபர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கோர்ட் விசாரணைக்கு ஆஜராகும்படி பிரகாஷ்ராஜுக்கு 2 முறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதை யடுத்துத், பிரகாஷ்ராஜுக்கு எதிராக ஜாமீன் இல்லாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் நடிகர் பிரகாஷ்ராஜ் எப்போது வேண்டுமானாலும் போலீசாரால் கைது செய்யப்பட்டு , கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.