உலக சாதனை படைத்த தெலுங்கு டூ ஹிந்தி படம்
யு டியூப் தளங்கள் பிரபலமான பிறகு அதில் வெளியாகும் புதிய திரைப்படங்களின் டிரைலர்கள், டீசர்கள், பாடல்கள் ஆகியவை மட்டும்தான் ரசிகர்களை அதிகம் கவர்கின்றன என பலர் நினைக்கிறார்கள். ஆனால், சத்தமில்லாமல் மறுபுறம் வேறு சில சாதனைகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
பெரும்பாலான தளங்கள் யு டியூப் தளங்களில் பதிவேற்றப்பட்டு அவை இலவசமாகப் பார்க்கக் கிடைக்கின்றன. பல மொழிகளில் பல பழைய திரைப்படங்களை இப்படித்தான் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். ஓடிடி தளங்களில் உள்ள படங்களைப் பார்க்க பணம் கட்ட வேண்டும். ஆனால், யு டியூப் தளத்தில் இலவசமாகவும் படங்களைப் பார்க்க முடியும்.
அந்த விதத்தில் தெலுங்கில் வெளியாகி ஹிந்தியில் டப்பிங் ஆன ஒரு படம் உலக அளவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
போயப்பட்டி சீனு இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் பெல்லம் கொண்டா சீனிவாஸ், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் 2017ல் வெளியான தெலுங்குப் படம் 'ஜய ஜானகி நாயகா'. இப்படம் தியேட்டர்களில் வெளியான போது தோல்வியைத்தான் தழுவியது.
ஆனால், ஹிந்தியில் 'கூன்கர்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு யு டியூப் தளத்தில் 2019ல் வெளியிடப்பட்டது. அப்படம் தற்போது யு டியூப் தளத்தில் ஒரு பில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. உலக அளவில் எந்த ஒரு திரைப்படமும் செய்யாத ஒரு சாதனை இது. இப்படிப்பட்ட ஒரு சாதனையை முதன் முதலில் ஒரு இந்தியத் திரைப்படம் செய்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.
தெலுங்கில் வெளியாகி ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியூப் தளத்தில் வெளியிடப்படும் தென்னிந்தியப் படங்களுக்கு ஹிந்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
'கேஜிஎப்' படம் யு டியூப் தளத்தில் 860 மில்லியன் பார்வைகளையும், 'சீதா' படம் 700 மில்லியன், 'நேனு சைலஜா' படம் 698 மில்லியன், 'அ ஆ' படம் 648 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளன. இது போல 20க்கும் மேற்பட்ட படங்கள் 200 மில்லியன் பார்வைகளைக் கடந்து அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.