உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யானை தந்தங்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்த மோகன்லால்

யானை தந்தங்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்த மோகன்லால்


கடந்த 2011ல் கொச்சியில் உள்ள மோகன்லால் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, அங்கே நான்கு யானைத் தந்தங்களும் மற்றும் தந்தத்தால் செய்யப்பட்ட சில கலைப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக அவர் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் 2016ம் ஆண்டு அவருக்கு அந்தப் பொருட்களை வைத்திருக்க மாநில அரசு உரிமையாளர் சான்றிதழ்களை வழங்கியது.

ஆனால் அது குறித்துத் தொடரப்பட்ட வழக்கில், 2025ல் கேரள உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, முறையான நடைமுறைகளைப் பின்பற்றாததால் அந்த உரிமையாளர் சான்றிதழ் செல்லாது என்று அறிவித்தது. இந்த வழக்கில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, வனம் தொடர்பான பொருட்களைத் தானாக முன்வந்து ஒப்படைக்கும் ஒரு பொதுமன்னிப்புத் திட்டத்தை வனத்துறை அறிவித்தது.

இதன் மூலமாக மோகன்லால் தனது வசம் உள்ள 2 ஜோடி யானைத் தந்தங்களையும் மற்றும் தந்த்தாலான சில கலைப் பொருட்களையும் வனத்துறை அதிகாரியிடம் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக மோகன்லாலின் இல்லத்திற்குச் சென்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அவரிடம் இது குறித்து நிறைய விவரங்கள் கேட்கப்பட்டன. இந்த ஒப்படைப்பு நடைமுறை முழுமையடையும் போது இந்த வழக்கில் இருந்து அவர் விடுபடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !