உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூலை 17ல் அறிவிக்கப்பட்ட படங்கள் திட்டமிட்டபடி வருமா?

ஜூலை 17ல் அறிவிக்கப்பட்ட படங்கள் திட்டமிட்டபடி வருமா?

2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக முதல்வர் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக தணிக்கை சான்றிதழுக்காகக் காத்திருந்த படத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்புதான் அது கிடைத்தது.

ஜூலை 24ம் தேதி இப்படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகலாம். ஒருவேளை அந்தத் தேதியில் படம் வந்தால் அதற்கு ஒரு வாரம் முன்பாகவும், ஒரு வாரம் பின்பாகவும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த தியேட்டர்களிலும் 'ஜனநாயகன்' படத்தை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கெனவே போட்ட ஒப்பந்தம் காரணமாக சில தியேட்டர்கள் வேண்டுமானால் அப்படத்தைத் திரையிடாமல் இருக்க வாய்ப்புள்ளது.

எனவே, ஜூலை 17ல் வெளியாகும் படங்கள் அதிகபட்சமாக ஒரு வாரம் மட்டுமே ஓட முடியும். ஜூலை 24ல் 'ஜனநாயகன்' வெளிவந்தால் அப்படம் குறைந்தது இரண்டு வாரங்களாவது தியேட்டரில் ஓட்டப்படும். அதனால், ஜூலை 31ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படங்களும் பாதிக்கப்படலாம்.

ஜூலை 17ல் “அர்ஜுனன் பேர் பத்து, அருள்வான், அன்பே டயானா, டார்க் ஹெவன், நாடோடி கூட்டம்” ஆகிய படங்கள் வெளியவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூலை 24ல் 'சத்தியவான் சாவித்திரி', ஜூலை 31ல் விஜய் மகன் இயக்குனராக அறிமுகமாகும் 'சிக்மா' படம் வெளியாவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நாள் வெளியீட்டு அறிவிப்புகளில் மாற்றம் வரவே வாய்ப்புகள் அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !