உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 'தெய்வமகன்' வெற்றிக்கு பின்னால் இருக்கும் தோல்வி கதை தெரியுமா?

பிளாஷ்பேக் : 'தெய்வமகன்' வெற்றிக்கு பின்னால் இருக்கும் தோல்வி கதை தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜி நடித்த 'தெய்வமகன்' திரைப்படம் அவரது டாப் 10 படங்களில் ஒன்று. தமிழ் சினிமாவை ஆஸ்கர் வரை கொண்டு சென்ற படம், அப்படிப்பட்ட படத்தின் கதை பெரும் தோல்வி கதை. அதை ஏ.சி.திருலோகச்சந்தர் மெருகேற்றி, உருமாற்றி, சிவாஜி என்ற மகா கலைஞனை மட்டுமே நம்பி வெற்றிக் கதையாக்கினார்.

வங்க மொழியில் நிஹார் ரஞ்சன் குப்தா எழுதிய 'உல்கா' என்ற நாவல் மிகவும் புகழ்பெற்றது. இந்த நாவல் முதலில் அவரது சொந்த மொழியான வங்க மொழியிலேயே 'உல்கா' என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. ஆனால், அந்தப் படம் படுதோல்வி அடைந்தது. அதன் பிறகு, கன்னட மொழியில் ஜி.வி. ஐயரால் 'தாயின் கருணை' என்ற பெயரில் எடுக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, கன்னடத்திலும் அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. கன்னடத்தில் எடுக்கப்பட்ட அதே நேரத்தில், தமிழிலும் 'தாயின் கருணை' என்ற பெயரில் வெளியானது. தமிழிலும் படம் தோல்வியடைந்தது.

இந்த கதை ஹிந்தியில் 'மேரி சூரத் தேரி அங்கன்' என்ற பெயரில் வெளியானனது. அசோக் குமார், ஆஷா பரேக் போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்தும், அந்த படமும் படுதோல்வி அடைந்தது. நான்கு மொழிகளில் வெளியான நான்கு படங்களும் தோல்வி அடைந்தது.

இதற்கு காரணம் கதையில் உள்ள சிக்கல். நாவலாக படிக்கும்போது ஏற்பட்ட உணர்வை சினிமா தரவில்லை. என்றாலும் இயக்குனர்கள் இதனை ஒரு சவாலாக ஏற்று இயக்கி தோல்வி அடைந்தார்கள். இதே கதையை ஏ.சி.திருலோகச்சந்தர். அந்த கதையை மீண்டும் படமாக்க முடிவு செய்தார். “தமிழ், கன்னடம், வங்கம், இந்தி என நான்கு மொழிகளில் தோல்வியடைந்த ஒரு படத்தை மீண்டும் ஏன் ரிஸ்க் எடுக்கிறீர்கள்?” என்று பலரும் அவரை எச்சரித்தனர். ஆனால், அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை சிவாஜி கணேசன் மட்டுமே. சிவாஜி கணேசனின் அசாத்திய நடிப்பு திறனால், இந்த படத்தை ஒரு வெற்றிப் படமாக மாற்ற முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார்.

திருலோகசந்தரின் நம்பிக்கையும், சிவாஜி கணேசனின் அசுர நடிப்பும் வீண் போகவில்லை. 'தெய்வமகன்' மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிவாஜி கணேசன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்திருந்தார். ஒரு வயதான தந்தை, அவரது இரு மகன்கள் என மூன்று கதாபாத்திரங்களிலும் சிவாஜி தனது நடிப்பால் உயிரூட்டினார். இந்த மூன்று கதாபாத்திரங்களும் வெவ்வேறு உடல்மொழி, வெவ்வேறு உச்சரிப்பு, வெவ்வேறு உணர்வுகளுடன் வெளிப்படுத்தப்பட்டன. அதற்கேற்ற பாடல்களும் அமைய படம் சூப்பர் ஹிட்டானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !