பிளாஷ்பேக்: ஒரே படம் இயக்கிய திரைப்பட எழுத்தாளர்
தமிழ் சினிமாவில் திரைப்பட எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. அந்தக் காலத்தில் இளங்கோ, ஆரூர்தாஸ், கலைஞானம், பிற்காலத்தில் பஞ்சு அருணாசலம், அன்னக்கிளி செல்வராஜ் இருந்தார்கள். இவர்கள் வரிசையில் வந்தவர்தான் 'வேதம் புதிது' கண்ணன்.
20க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, இயக்கி உள்ளார். அவற்றில் 8 நாடகங்கள் திரைப்படங்களாகி உள்ளது. குறிப்பாக இவரது 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற நாடகம்தான் பாரதிராஜா இயக்கத்தில் 'வேதம் புதிது' திரைப்படமானது. இந்த படத்திற்கு திரைக்கதை வசனத்தை கண்ணணே எழுதினார். இதன்பிறகு அவர் 'வேதம் புதிது' கண்ணன் என்றே அழைக்கப்பட்டார்.
அதன்பிறகு ஏராளமான படங்களுக்கு கதை எழுதினார். சிவா, காவல் கீதம், பகலில் பவுர்ணமி, போன்றவை முக்கியமானவை. சின்னத்திரை தொடர்களுக்கு கதை வசனம் எழுதினார். சகானா, அன்னை, நிம்மதி உங்கள் சாய்ஸ், ஜன்னல் போன்றவை முக்கியமானவை. கண்ணனுக்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. இதனால் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அவர் இயக்கிய படம் 'அமிர்தம்'.
இந்த படத்தில் கணேஷ், நவ்யா நாயர், கிரிஷ் கர்நாட், ராஜீவ், ரேகா, ரஞ்சிதா, நிழல்கள்ரவி உள்ளிட்ட பலர் நடித்தனர். பவதாரிணி இசை அமைத்தார். படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும், வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இதனால் அதன் பிறகு கண்ணன் படம் எதுவும் இயக்கவில்லை.