மாதுரி தீட்சித்தை சந்தித்த வாமிகா கபி ; கனவு நனவானது என பெருமிதம்
தமிழில் 10 வருடங்களுக்கு முன்பு 'மாலை நேரத்து மயக்கம்' என்கிற படத்தில் நடித்தவர் ஹிந்தி நடிகை வாமிகா கபி. ஆனால் இந்த 2026ல் ஏற்கனவே இரண்டு படங்கள் வெளியான நிலையில், தற்போதும் கைவசம் பத்து படங்களை இவர் வைத்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா ? ஆனால் அதுதான் உண்மை. சமீபத்தில் ஹிந்தியில் வெளியான 'பூத் பங்களா' படத்தில் நடித்த வாமிகா கபி, தமிழில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் டிசி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இது தவிர ஹிந்தி, மலையாளம் என பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தனது பேவரிட் நடிகையான மாதுரி தீட்சித்தைச் சந்தித்துள்ளார் வாமிகா கபி. ஒரு படப்பிடிப்பு தளத்தில் தற்செயலாக மாதுரி தீட்சித்தைச் சந்தித்த வாமிகா கபி, தனது குழந்தை பருவத்தில் இருந்தே அவரது தீவிர ரசிகை என்றும், தன்னுடைய வாழ்வில் அவர் எந்த அளவிற்கு முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறார் என்பதையும் மகிழ்ச்சியுடன் விவரித்திருக்கிறார். இது என் வாழ்க்கையில் கனவு நனவான தருணம் என்று கூறியுள்ள வாமிகா கபி, இது குறித்த வீடியோவையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.