உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : முதல் படத்தின் முதல் காட்சியையே பேட்டரி இல்லாமல் படமாக்கிய கோடி ராமகிருஷ்ணா... நூறு படங்களைத் தாண்டினார்

பிளாஷ்பேக் : முதல் படத்தின் முதல் காட்சியையே பேட்டரி இல்லாமல் படமாக்கிய கோடி ராமகிருஷ்ணா... நூறு படங்களைத் தாண்டினார்

தெலுங்கு திரையுலகின் கமர்சியல் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் மறைந்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா. கிட்டத்தட்ட தெலுங்கில் மட்டுமே 100 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர், தமிழில் சரத்குமார் நடித்த 'கேப்டன்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கு 'அம்மன்', 'தேவி', 'அருந்ததி' என சாமி படங்கள் மூலம் ரொம்பவே அறிமுகமானவர்தான் இவர்.

1982-ல் 'இன்டலோ ராமய்யா வீதிலோ கிருஷ்ணய்யா' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் கதாநாயகனாக சிரஞ்சீவி நடிக்க, கதாநாயகிகளாக மாதவி, பூர்ணிமா ஆகியோர் நடித்தார்கள். படத்தின் முதல் காட்சியை சிரஞ்சீவியை வைத்து படமாக்க வேண்டும் என கோடி ராமகிருஷ்ணா விரும்பினார். ஆனால் படப்பிடிப்பு துவங்கிய அன்று சிரஞ்சீவி வர தாமதமானதால், நல்ல நேரம் போய்விடும் என்று கதாநாயகி பூர்ணிமாவை வைத்து முதல் காட்சியை எடுக்கச் சொல்லி தயாரிப்பாளர் வற்புறுத்தினார். இதனால் அரை மனதோடு அந்த காட்சியை படமாக்கினார் கோடி ராமகிருஷ்ணா.

அதன்பிறகுதான் கேமராவில் பேட்டரி இணைக்கப்படவில்லை என்று கேமரா உதவியாளர் வந்து சொல்ல, சென்டிமென்டாக முதல் காட்சியே இப்படி எடுக்கப்பட்டதா என்று தயாரிப்பாளர் உட்பட செட்டில் இருந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். புதிய இயக்குனரின் முதல் படத்திலேயே இப்படி நடப்பது என்பது ஒரு மோசமான சகுனம் என்பது போன்றும் பேச ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில் நடிகர் சிரஞ்சீவி படப்பிடிப்பு தளத்தில் நுழைந்ததும், அனைவரும் கவலையுடன் இருப்பதை பார்த்ததும் விஷயத்தை அறிந்து கொண்டார்.

உடனடியாக அனைவரையும் அழைத்து, பரவாயில்லை விடுங்கள், இப்போது என்னுடன் முதல் காட்சியை எடுங்கள். இந்த படம் ஓராண்டு ஓடாவிட்டால் என்னிடம் கேளுங்கள் என்று நகைச்சுவையுடன் கூறி அனைவரையும் சகஜ நிலைக்கு கொண்டு வந்து படப்பிடிப்பை நடத்த வைத்தார். அவர் சொன்னபடியே அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று திரையரங்குகளில் ஓராண்டுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அந்த இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா தான் பிற்காலத்தில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் இயக்கி சாதனை படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !