உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தயாரிப்பாளருக்கு ரூ.4.25 கோடியை வட்டியுடன் செலுத்தும்படி கவுதம் மேனனுக்கு உத்தரவு

தயாரிப்பாளருக்கு ரூ.4.25 கோடியை வட்டியுடன் செலுத்தும்படி கவுதம் மேனனுக்கு உத்தரவு

'நிதி விவகாரத்தில், 'ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட்' தயாரிப்பு நிறுவனத்துக்கு 4.25 கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தர வேண்டும்' என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

'ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த எல்ரெட் குமார் மற்றும் இயக்குநர் கவுதம் மேனனின், 'போட்டான் பேக்டரி' இடையே, நடிகர் சிம்புவை வைத்து படத்தை இயக்க, 2008ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக தயாரிப்பு நிறுவனம், 4.25 கோடி ரூபாயை முன்பணமாக வழங்கியது. எனினும், பல காரணங்களால் இப்படம் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனம், பணத்தை மீட்டு தரக்கோரி, 2013ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்தது.

விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, 2010 முதல் கணக்கிட்டு, 4.25 கோடி ரூபாயை, 12 சதவீத வட்டியுடன் தயாரிப்பாளருக்கு வழங்கும்படி, 2022ல் இயக்குநர் கவுதம் மேனனுக்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் கவுதம் மேனன் மேல்முறையீடு செய்தார். விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, மனுவை கடந்த மார்ச்சில் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் இயக்குநர் கவுதம் மேனன் மேல்முறையீடு செய்தார்.

இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அமர்வு, 'சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட, எந்தவொரு தகுந்த சட்ட காரணமும் இல்லை' எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.

இதன் மூலம், 18 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த நிதி பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. மேலும், 12 சதவீத வட்டியுடன், 4.25 கோடி ரூபாய், வழக்கு செலவு தொகையான 12 லட்சம் ரூபாயை தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குநர் கவுதம் மேனன் வழங்குவதும் கட்டாயமாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !