‛ராமாயணா' படத்தின் விளம்பரங்களுக்காக மட்டும் 375 கோடி செலவு!
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடிப்பில் ஹிந்தியில் தயாராகியுள்ள ‛ராமாயணா' படத்தை ஒரு உலகளாவிய படமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க அதன் தயாரிப்பாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, இப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக மட்டுமே சுமார் 375 கோடி தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த படத்தின் சர்வதேச விநியோக உரிமையை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதால், உலகளவில் மிகவும் பிரமாண்டமான முறையில் இது வெளியாகவுள்ளது. இந்த விளம்பரப் பிரசாரத்தின் பிரமாண்டம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தாலும், இதில் அடங்கியுள்ள நிதி சார்ந்த ஆபத்துகள் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
படத்தின் விளம்பரத்திற்காக மட்டுமே இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடுவதால், அந்த செலவை மீட்டெடுக்க இப்படம் திரையரங்க வசூலில் மிகச் சிறப்பான சாதனையைப் படைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இருப்பினும், படக்குழுவினர் இந்தத் திட்டத்தின் மீது மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர். நட்சத்திர நடிகர்களின் பட்டாளம், பிரமாண்டமான காட்சிகள் மற்றும் நம் வரலாற்றுக் கதைக்களம் ஆகியவற்றுடன் உருவாகும் ராமாயணா, இந்திய சினிமா இதுவரை கண்டிராத மிகப்பெரிய திரைப்படமாக உருவாகி இருப்பதால் இப்படம் உலக ரசிகர்களை கவர்ந்திழுக்க கூடியதாக இருக்கும் என்று அப்படக்குழு முழுமையாக நம்புகிறது.