சகோதரரை தேற்றுவதற்காக ரியாலிட்டி ஷோ வீட்டுக்கு சென்ற சல்மான் கான்
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் இரண்டு சகோதரர்களும் சினிமாவில் நடிகர்களாக, தயாரிப்பாளர்களாகப் பயணித்து வருகின்றனர். இதில் ஒரு சகோதரரான சோகைல் கான், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி போன்று ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் 'அலையன்ஸ்' என்கிற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார். 42 நாட்கள் மட்டுமே நடக்கும் இந்தப் போட்டியை நடிகர் குணால் கெம்மு தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்வில் சோகைல் கானின் முன்னாள் மனைவியான சீமா சஜிதேவும் கலந்துகொண்டிருந்தார். இவர்கள் விவாகரத்து பெற்றுப் பிரிந்திருந்தாலும், ஆச்சரியமாக இந்த நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் ஆதரவாகத் துணை நின்றனர். இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் சீமா சஜிதேவ் இந்தப் போட்டியிலிருந்து வெளியேறினார். இதனால் அடுத்தடுத்து வந்த நாட்களில் சோகைல் கான் மனவேதனை அடைந்து, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தனது சகோதரருக்கு ஆறுதல் சொல்லித் தேற்றவும், அவருக்கான உறுதியையும் உற்சாகத்தையும் கொடுப்பதற்காக நேற்று மாலை 'அலையன்ஸ்' வீட்டிற்கு நேரடியாகவே விசிட் அடித்துள்ளார் சல்மான் கான். அங்கே ஒரு மணி நேரம் செலவிட்டு, சகோதரருக்கு ஆறுதல் கூறிவிட்டு, மற்ற போட்டியாளர்களையும் உற்சாகப்படுத்திவிட்டு வந்துள்ளார் சல்மான் கான்.