இந்த ஆண்டிலேயே 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறிவைக்கும் சூர்யா!
'கருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார் சூர்யா. வெங்கி அட்லூரி இயக்கத்தில், மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் இந்த ஆண்டில் சூர்யாவின் இரண்டாவது வெளியீடாகும்.
இந்நிலையில், ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் தனது 47வது படமும் 2026ம் ஆண்டு முடிவிற்குள் வெளியாகும் என்பதை சூர்யா உறுதிப்படுத்தியுள்ளார். தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா இதழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாகவும், ஆண்டின் இறுதியில் திரைக்குக் கொண்டுவர ஆயத்தமாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். இப்படத்தின் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார்.
ஏற்கனவே கருப்பு படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ள நிலையில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜித்து மாதவனுடன் இணைந்துள்ள இந்த புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. வரவிருக்கும் இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றால், 2026ம் ஆண்டில் சூர்யா, ஹாட்ரிக் வெற்றியுடன் தனது வெற்றிப் பயணத்தை தொடருவார்.