வம்சி பைடிபள்ளி படத்துக்காக 16 கிலோ எடையை குறைத்த சல்மான்கான்!
'சிக்கந்தர்' படத்தை அடுத்து சல்மான்கான் நடித்துள்ள படம் 'மாத்ருபூமி'. அபூர்வா லக்கியா இயக்கியுள்ள இந்த படம் 2020ம் ஆண்டில் இந்தியா- சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற ராணுவ மோதலை மையமாக கொண்ட கதையில் உருவாகியுள்ளது. ஆனால் இந்த படத்திற்கு சீனா தரப்பிலிருந்து எழுந்த எதிர்ப்புகள் மற்றும் கதை குறித்த சர்ச்சை காரணமாக கதையில் திருத்தம் செய்திருப்பதோடு, 'பேட்டில் ஆப் கல்வான்' என்ற தலைப்பை 'மாத்ருபூமி' என்று மாற்றி வைத்துள்ளனர்.
இப்படம் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது. அதையடுத்து தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் சல்மான்கான். இந்நிலையில் அமேசான் பிரைம் வீடியோவின் அலையன்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட சல்மான் கான், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்காகத் தான் 16 கிலோ எடையைக் குறைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். தற்காலிகமாக 'எஸ்விசி -63' எனப் பெயரிடப்பட்டுள்ள வம்சியின் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். 2027 ஈத் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.