தியேட்டரில் வெளியாகும் அஜித்தின் 'கிளாடியேட்டர்ஸ்'
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கார் ரேசில் ஆர்வம் காண்பித்து வருகிறார் அஜித். துபாய், மலேசியா,பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டார். அந்த காட்சிகளை, போட்டிகளை 'கிளாடியேட்டர்ஸ்' என்ற பெயரில் ஆவணப்படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய். இந்த படத்தை கோல்டன் டிராபி பிலிம் புரொடக்ஷன் சார்பில் அஜித் மனைவி ஷாலினி தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்தபடத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்த ஆவணப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இதில் வீடியோகிராபர் நியோல் கெம்மன், ஒளிப்பதிவாளர்கள் ரிப்ஹு சர்மா, கபிலன் விநாயக், படத்தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோரும் பணியாற்ற உள்ளனர். இது ஆவணப்படம் என்பதால் வழக்கமான பாடல், பைட், பஞ்ச் டயலாக் இருக்காது. ஆனால், அஜித் பற்றி, கார் ரேஸ் பற்றி பல சினிமா பிரபலங்கள் பேசியிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன், நயன்தாரா, சிபிராஜ், உட்பட பலர் கார் ரேஸ் நடக்கும் நாடுகளுக்கு சென்று பேசியிருக்கிறார்கள். இந்த படம் ஓடிடியில் வருமா? தியேட்டர்களில் வருமா? அப்படி தியேட்டரில் வந்தால் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் இருக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த படத்தை உருவாக்கவும் சில கோடிகளை செலவழித்து இருக்கிறார் அஜித். அதனால், எப்படி திரையிடலாம் என அவர்கள் யோசித்து வந்தனர். அதன்பின்னர், தியேட்டரில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று வெளியிடப்பட்ட புதிய போஸ்டருடன், விரைவில் திரையரங்குகளில் எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தை தியேட்டரில் பார்க்க காத்திருக்கின்றனர்.
தனது பட புரமோஷன்களுக்கு அஜித் வருவது இல்லை. ஆனால், கார் ரேஸ் நடந்தபோது அது குறித்து பல்வேறு நாடுகளில் பேட்டி கொடுத்தார். அதனால், இந்த பட ரிலீஸ் ஆவதற்கு முன்பு அவர் ரேஸ், அதில் நடந்த சுவாரஸ்யம் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.