'ராமாயணா' இரண்டாம் பாகம் 50 சதவீதம் நிறைவு - ரன்பீர் கபூர் தகவல்
ஹிந்தியில் நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராமாயணா'. அமெரிக்காவில் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இப்படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார் ரன்பீர் கபூர். அவர் கூறுகையில், ''ராமாயணா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 50 சதவீதம் முடிந்துவிட்டது. மேலும், திட்டமிட்டபடி 2027ம் ஆண்டு தீபாவளி அன்று இரண்டாம் பாகத்தை வெளியிடுவதற்காக, முதல் பாகத்தின் பின் தயாரிப்புப் பணிகளுடன் சேர்த்து இரண்டாம் பாகத்தின் வேலைகளும் ஒரே நேரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது'' எனத் தெரிவித்தார்.
அதோடு, ராமாயணக் கதையை 10 பாகங்கள் கொண்ட திரைப்படத் தொடராக எடுக்கும் அளவுக்கு இதில் விஷயங்கள் இருக்கிறது. என்றாலும், மூலக் காவியத்திற்கு உண்மையாக இருக்கும் அதே வேளையில், எந்தப் பகுதிகளைச் சேர்க்க வேண்டும் என்பதை இயக்குனர் நித்தேஷ் திவாரியும் அவரது குழுவினரும் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இதன் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதுடன், ஐமேக்ஸ் வடிவத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பிரமாண்டமான காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன.