தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்த பேய் படங்கள்
தமிழ் சினிமாவில் திகிலும் சுவாரஸ்யமும் நிறைந்த பேய் படங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. வெறும் பயமுறுத்துவது மட்டுமின்றி, நகைச்சுவை, திரில்லர் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைகளோடு வெளிவந்து ரசிகர்களை அதிகம் கவர்ந்த முக்கிய தமிழ் பேய் படங்கள் இதோ...
1. ஆல்-டைம் பிளாக்பஸ்டர் படங்கள்
சந்திரமுகி (2005)
பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான படம். ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பு, வடிவேலுவின் காமெடி மற்றும் வித்யாசமான மனோதத்துவப் பின்னணி என தமிழின் மிகச்சிறந்த பேய் படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. வழக்கமாக ரஜினி படம் என்றால் ஸ்டைல், அவரது அதிரடிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் இந்த படத்தில் ஒட்டுமொத்த கதையும் ஜோதிகாவை சுற்றியே அமைக்கப்பட்டு, படத்தை மாஸ் ஹிட் ஆக்கினார்கள். மலையாளத்தில் வெளிவந்த மணிச்சித்ரதாழ் படத்தின் ரீமேக் இது.
முனி / காஞ்சனா தொடர்
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த இத்தொடர், தமிழ் சினிமாவில் 'ஹாரர்-காமெடி' டிரெண்டை மிகப்பெரிய உச்சத்திற்கு கொண்டு சென்றது. பேய் பயமும், கோவை சரளா - லாரன்ஸ் காம்பினேஷன் நகைச்சுவையும் குடும்ப ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. முனி-யாக தொடங்கி பின்னர் காஞ்சனா சீரிஸில் மூன்று பாகங்கள் வெளியாகிவிட்டன. இப்போது காஞ்சனா 4 உருவாகி வருகிறது.
02. மிரட்டலான ஹாரர் மற்றும் த்ரில்லர் படங்கள்
ஈரம் (2009)
அறிமுக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், தண்ணீரை மையமாகக் கொண்டு உருவான வித்தியாசமான பழிவாங்கும் பேய் கதை. இதன் இசையும், கலர் டோனும் பயத்தை நேர்த்தியாகக் கடத்தியிருக்கும்.
பிட்சா (2012)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இத்திரைப்படம், தமிழ் ஹாரர் சினிமா வரலாற்றில் ஒரு புதிய அலையை உருவாக்கியது. எதிர்பாராத க்ளைமேக்ஸ் திருப்பமும், குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திகில் சூழலும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
பிசாசு (2014)
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த படம். வழக்கமான பேய் படங்களைப் போல பயமுறுத்தாமல், பேயின் மீதான பரிதாபத்தையும் அன்பையும் காட்டிய வித்தியாசமான கதையம்சம் கொண்ட கிளாசிக் படம்.
டிமான்டி காலனி (2015 & 2024)
சென்னையில் உள்ள நிஜமான இடத்தின் பின்னணியை மையமாகக் கொண்டு, நான்கு நண்பர்கள் ஒரு பூட்டிய வீட்டிற்குள் சந்திக்கும் திகில் சம்பவங்களை தத்ரூபமாகப் படமாக்கியிருப்பார்கள்.
மாயா (2015)
நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம். எவ்வித தேவையில்லாத பாடல்களோ நகைச்சுவையோ இன்றி, ஆரம்பம் முதல் முடிவு வரை சீட் நுனியில் உட்கார வைக்கும் சைக்கலாஜிகல் ஹாரர் படமாக அமைந்தது.
அவள் (2017)
சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளிவந்த படம். ஹாலிவுட் பாணியில் நேர்த்தியான ஒலி அமைப்பு, ஒளிப்பதிவு மற்றும் பயமுறுத்தும் காட்சிகளுடன் உருவான மிகச் சிறந்த ஹாரர் படங்களுள் ஒன்று.
3. ஹாரர் - காமெடி படங்கள் (Horror-Comedy)
யாமிருக்க பயமே (2014) :
குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, ஹோட்டல் ஒன்றை மையமாகக் கொண்டு ரசிகர்களை சிரிக்கவும் பயப்படவும் வைத்த ஹிட் படம்.
அரண்மனை தொடர் (Aranmanai Series) :
சுந்தர் சி இயக்கத்தில் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் அரண்மனை பின்னணியில் உருவாகும் இத்தொடர், வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்ற ஹாரர்-காமெடி தொடராகும். இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகி, நான்குமே வெற்றி பெற்றன.