இப்படி தான் சினிமா எடுக்குறாங்களா? பிரமாண்ட தோற்றத்தை உருவாக்கும் சிறிய நுணுக்கங்கள்
திரைப்படங்கள் திரையில் உருவாக்கும் மாயாஜாலத்திற்குப் பின்னால், தியேட்டரில் நாம் கவனிக்கத் தவறிய அல்லது அறியாத பல வியக்க வைக்கும் தொழில்நுட்ப உத்திகள் ஒளிந்துள்ளன. படம் பார்க்கும் போது மிக பிரம்மிப்பாக நாம் பார்த்து அசந்த சில காட்சிகளை மிக சிறிய நுணுக்கமான விஷயங்களை வைத்து தான் உருவாக்குகிறார்கள். திரையில் நமது கண்ணை விரிய வைக்கும் ஆச்சரியங்களுக்கு பின்னால், இருக்கும் உண்மையான மேஜிக் ஆச்சரியங்களில் சில...
திரையில் நாம் பார்க்கும் 2 மணி நேரப் பிரமிப்பிற்குப் பின்னால், சினிமா வல்லுநர்கள் பயன்படுத்தும் விசித்திரமான அறிவியலும், சாதுரியமான தந்திரங்களும் சில:
மழை மற்றும் பனி பொழிவு மாயாஜாலம்:
திரைப்படங்களில் மழை பொழிவது போலக் காட்டும் காட்சிகளில் வெறும் தண்ணீரைப் பயன்படுத்தினால், கேமரா வெளிச்சத்தில் நீர்ச்சத்துக்கள் தெளிவாகத் தெரியாது. இதற்காக தண்ணீருடன் சிறிதளவு பால் அல்லது ப்ளோரசன்ட் சாயம் கலக்கப்பட்டு மழை பொழிய வைக்கப்படுகிறது. அதேபோல், பனிப்பொழிவு காட்சிகளுக்கு உருளைக்கிழங்கு சீவல்கள் மற்றும் மெல்லிய காகிதத் துகள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சுவர் ஏறும் காட்சிகள்:
படங்களில் ஹீரோ செங்குத்தான சுவர் அல்லது மலையில் ஏறுவது போன்ற சீன்களை பல படங்களில் நாம் பார்த்திருப்போம். அதே போல் சுவர் மீது ஏறி, குதித்து சண்டை போடும் காட்சிகளும் பார்த்திருப்போம். விபரம் தெரியாதவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த சீனில் நடித்துள்ளார் என்பார்கள். விபரம் அறிந்தவர்கள், டூப் போட்டு நடித்துள்ளார் என்பார்கள். ஆனால் உண்மையில் இது போன்ற சீன்கள் தரை தளத்திலேயே சுவரை அமைத்து, கேமராவை பக்கவாட்டில் சாய்த்துப் படம்பிடிப்பார்கள். நடிகர்கள் தரையில் தான் ஊர்ந்து செல்வார்கள்.
கார் ஓட்டும் காட்சிகள் :
நடிகர் காரை கவனிப்பாக ஓட்டிக் கொண்டே பேசுவது. கார் உண்மையில் ஒரு தாழ்வான லாரியின் (Process Trailer) மீது இருக்கும். நடிகர் ஸ்டீயரிங்கை சும்மா திருப்புவார், லாரி தான் காரை இழுத்துச் செல்லும்.
காரின் உடைந்த கண்ணாடிகள் :
விபத்தில் கண்ணாடிகள் நொறுங்கி பறப்பது ஆபத்தானது. அதனால் நிஜக் கண்ணாடிகளுக்குப் பதிலாக சர்க்கரை பாகினால் செய்யப்பட்ட சர்க்கரைக் கண்ணாடி (Sugar Glass) பயன்படுத்தப்படுகிறது.
தொலைபேசி குரல்கள் :
போனில் எதிர்முனையில் பேசுபவரின் விசித்திரக் குரல் உண்மையான போனின் அதிர்வெண்ணை (Frequency) செயற்கையாகக் குறைத்துத் திரையில் ஒலிப்பார்கள். இதனை பட்ஸ் எபெக்ட் (Futz Effect) என்பார்கள்.
'Behind the Scenes' உண்மைகள் :
தி வால்ட் டிஸ்னி ரகசியம் (Multiplane Camera):
1930களில் டிஸ்னி நிறுவனம் அனிமேஷன் படங்களை உருவாக்கிய போது, ஆழமான முப்பரிமாண (3D) உணர்வைக் கொண்டுவர பல கண்ணாடித் தகடுகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, தனித்தனி அடுக்குகளாகப் படம்பிடிக்கும் 'மல்டிப்ளேன் கேமரா' என்ற பிரமாண்ட கருவியைப் பயன்படுத்தியது.
சுவாசச் சத்தம் (Darth Vader's Breathing):
'ஸ்டார் வார்ஸ்' படத்தில் வரும் புகழ்பெற்ற வில்லன் கதாபாத்திரமான டார்த் வேடரின் பயங்கரமான மூச்சுச் சத்தம், ஒரு ஸ்கூபா டைவிங் ரெகுலேட்டர் மூலம் சுவாசித்து பதிவு செய்யப்பட்டது.
இரவுக் காட்சிகள் (Day for Night):
பல பழைய திரைப்படங்களில் நடு இரவில் நடப்பது போன்ற காட்சிகள் உண்மையில் உச்சக்கட்ட வெயில் அடிக்கும் பகல் வேளையில் படமாக்கப்பட்டவை. கேமராவில் பிரத்யேக நீல நிற பில்டர்களைப் பயன்படுத்தியும், எக்ஸ்போஷரைக் குறைத்தும் இரவாக மாற்றுவார்கள்.
கிரீன் ஸ்கிரீன் ஏன் பச்சை நிறம்?:
பச்சை நிறம் மனிதர்களின் தோல் நிறத்திற்கு (Skin Tone) முற்றிலும் மாறானது என்பதால், கணினியில் பின்னணியை நீக்குவது (Chroma Keying) மிக எளிது. இதனாலேயே படப்பிடிப்பில் பச்சை மற்றும் நீல நிறங்கள் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.