'டாக்சிக்' இயக்குனரை விடாமல் டார்ச்சர் செய்யும் மம்முட்டி பட இயக்குனர்
சமீபத்தில் யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் வெளியான 'டாக்சிக்' திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை அதிக அளவில் பெற்று வருகிறது. குறிப்பாக, ஒரு பெண் இயக்குநர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பெண்களை மிகவும் தரக்குறைவாகச் சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் நிதின் ரெஞ்சி பணிக்கர் இயக்கத்தில் 'கசபா' என்கிற படம் வெளியானது. அந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியான மம்முட்டி சக பெண் போலீஸ் அதிகாரிகளிடம் முரட்டுத்தனமாக டீல் செய்வது போல காட்சிகள் இருந்தது. அப்போது இதற்கு சினிமா பெண்கள் அமைப்பைச் சேர்ந்த நடிகை பார்வதி மற்றும் இயக்குநர் கீது மோகன்தாஸ் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இது பெண்களை இழிவுபடுத்தும் செயல் என்று பொது மேடையிலேயே அவர்கள் அப்போது பேசியது மிகப்பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 'டாக்சிக்' படத்தின் முதல் டீசர் வெளியான போதே 'கசபா' படத்தின் இயக்குநர் நிதின் ரெஞ்சி பணிக்கர், கீது மோகன்தாஸ் குறித்து, இவர் இங்கே மலையாளத்தில் ஒன்று பேசுவார், கர்நாடகாவுக்குச் சென்றால் அங்கு வேறு மாதிரி செய்வார் என கிண்டல் அடித்திருந்தார். தற்போது முழு படமும் வெளியாகி அது எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், தன்னுடைய கசபா படத்திலிருந்து மம்முட்டி சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள நிதின் ரெஞ்சி பணிக்கர், அன்று என் படத்தை விமர்சித்தவர்கள் இன்று அதே போன்ற விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர் என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.