எஸ்.ஜே.சூர்யா கேமராவில் 100%, டப்பிங்கில் 500% நடிப்பார்: கார்த்தி
சென்னையில் நடந்த 'சர்தார் 2' பட பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது: எனக்கு முதல் படத்தில் இருந்தே ரசிகர்கள் அன்பு கிடைத்தது. சினிமா பெரிய கனவு, ஒரு இடத்துக்கு வர பல லட்சம் பேர் காத்திருக்காங்க. அதுக்கு பெரிய உழைப்பு, தியாகம் தேவைப்படுது. நம்ம மட்டுமல்ல, நம்ம குடும்பமும் சினிமாவில் ஜெயிக்க தியாகங்கள் செய்ய வேண்டியது இருக்கிறது. நேரம் காலம் கிடையாது. சினிமாகாரங்களை எந்த பொண்ணும் கல்யாணம் பண்ணமாட்டாங்க. அதனால், சினிமாவுக்கு சப்போர்ட் பண்ணுற பெண்கள், குடும்பத்தினருக்கும் நன்றி.
தமிழ் சினிமா என்பது தமிழகத்தில் அடையாளம். நான் வெளிநாட்டில் படித்தேன். அங்கே நம் படத்துக்கு தனி அடையாளம் இருக்குது. சிலர் கிண்டல் பண்ணுவாங்க. சிலர் பாராட்டுவாங்க. அதனால், அவங்க பாராட்டுவது மாதிரி படம் பண்ண வேண்டும் என நினைப்பேன். 'சர்தார் 2' அப்படிப்பட்ட படம்.
எஸ்.ஜே.சூர்யா கடின உழைப்பாளி, அவர் மாதிரி பலர் வர்றாங்க. ஆனாலும், அவர் மாதிரியான ஆட்கள் ஜெயிக்க, ஒரு தயாரிப்பாளர்தான் காரணம். அவர்கள் பணம் போடுகிறார்கள். இந்த படத்துக்கு என் நண்பன் லட்சுமணன் கடின உழைப்பை கொடுத்து இருக்கிறார். சர்தார்2 படம் ஹிட்டானால், இந்த மாதிரி பல படங்கள் வரும். நான் பல புதுமுக இயக்குனர்களிடம் படம் பண்ணியிருக்கிறேன். இந்த படத்தில் தெரிந்த டீமுடன் பண்ணியிருக்கிறேன்.
யோகிபாபு
இதுல யோகிபாபு நடிச்சு இருக்கிறார். அவர் முருக பக்தர். எந்த முருகன் கோயிலுக்கு சென்றாலும் எனக்கு அந்த கோயில் போட்டோ அனுப்புவாரு. அடிக்கடி முருகர் போட்டோ அனுப்புவாரு. அவரை நான் முருகா, முருகானுதான் கூப்பிடுவேன். அவர் பயணம் சாதாரணமானது அல்ல. 50 ரூபாய்க்கு வேலை பார்த்து இருக்கிறாரு. பல நாட்கள் தயாரிப்பாளர், இயக்குனர் வீட்டு கதவை தட்டி சான்ஸ் கேட்டு, இந்த நிலைக்கு வந்து இருக்கிறாரு. தனக்கான சீனை அப்படி மாற்றுகிறாரு. அவர் ரைட்டரும் கூட. தயாரிப்பாளர் நல்லா இருக்கணும்னு நினைக்கிறாரு. அதனால், அவர் தோல்வி அடைவது இல்லை. 24 மணி நேரமும் உழைக்கிறார். அடிக்கடி வீட்டுக்கு போய் குழந்தையை பாருங்க. இல்லைன்னா உங்க முகத்தை மறந்திடுவாங்கனு நான் அடிக்கடி சொல்வேன். அவர் கஷ்டப்பட்டு வந்தவரு. நடிகர் சங்கத்துக்கு நிறைய உதவிகள் செய்து இருக்கிறாரு.
சாம் சி.எஸ்க்கு 100வது படம்
நடிகை மாளவிகா மோகனன், நம்ம ஊர் மோனிகாபெலுாச்சி மாதிரி இருக்காங்க. ஆனால், படத்துல வேறு காஸ்ட்யூமில் இருப்பாங்க. காரணம், படத்துல அவங்க என் பாஸ். அவரின் கதாபாத்திரம் 'ஆயிரத்தில் ஒருவன்' ஆண்ட்ரியாதான் எனக்கு நினைவுக்கு வந்தாங்க. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-க்கு தனியாக ஒரு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் எல்லா பிரியாணி கடைகளிலும் 'கைதி' படத்தின் இசையை போடுகிறார்கள் அந்த வகையில் அவருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு இது 100வது படம். இளையராஜாவின் முதல் படம் அப்பா சிவகுமார் நடித்த 'அன்னக்கிளி', யுவனின் 100வது படம் நான் நடித்த 'பிரியாணி'. என்னுடைய படம் சாம் சி.எஸ்க்கு 100வது படமாக அமைந்தது சந்தோஷம். எந்த சினிமா பின்னணியில் இருந்தும் வராமல் ஜெயித்து இருக்கிறார்.
ஷில்பா ஷெட்டி ரசிகர்
இயக்குனர் மித்ரன் என்ன சொன்னாலும் நான் செய்வேன். அவர் எனக்காக கடும் உழைப்பை கொடுக்கும் கதையை எழுதலாம். ஆனால், பெண் வேடத்தில் நடிக்கமாட்டேன். கடந்த சர்தார் முதல் பாகத்தில் பல நல்ல விஷயங்கள் இருந்தன. இந்த படத்திலும் அப்படி பல விஷயங்கள் இருக்கிறது. எஸ்.ஜே. சூர்யா நடித்தால் மட்டுமில்லை, அவர் பேட்டி கொடுத்தால் கூட வைரல் தான். 'குஷி' பார்த்து மிரண்டு இருக்கிறேன். 'வாலி' படத்தை கொடுத்தவர். என்னை வெச்சு படம் எடுங்கனு நான் பல நாட்கள் அலைந்தேன். நான் நடிக்கப்போறேன்னு சொல்லிட்டாரு. வாலி படத்தில் சிம்ரனை அழகாக காண்பித்தார். குஷி படத்தில் அண்ணி ஜோதிகா மிரட்டினாங்க. அந்த படம் பார்த்துதான் நான் ஷில்பா ஷெட்டி ரசிகர் ஆனேன்.
சில நாட்கள் எஸ்.ஜே.சூர்யா மண்டையை உடைத்து உள்ளே என்ன இருக்குது பார்க்கலாம்னு நினைப்பேன். அவர் ஒரு இலக்கு வெச்சு இருக்கிறாரு. நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா கேமரா முன்பு 100 சதவீதம் நடிக்கிறார் என்றால் டப்பிங் மைக் முன்பு 500 சதவீதம் நடிக்கிறார். எம் ஆர் ராதா, நம்பியாருக்கு பிறகு வில்லத்தனத்தில் தொடர்ச்சியாக மிரட்டி வருகிறார். வில்லன் நடிகர்கள் பேச்சு, நடை, உடை பிரமாதமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு ரசிகர்கள் அதிகம். சினிமாவை அவர் காதலிக்கிறார். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், உதவி இயக்குனர், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என அவர் பலருக்கு இன்ஸ்பிரேசன்.
அப்பா கதை கேட்டது இல்லை
எனக்காக அப்பா சிவகுமார் எந்த கதையும் கேட்டது இல்லை. நீங்களே முட்டிமோதி வரட்டும்னு நினைச்சிட்டாரு. அவர் எவ்வளவு பெரிய ஹீரோ. ஆனாலும் தலையிட்டது இல்லை. நான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வர்றேன்னுசொன்னதும் அம்மா சந்தோஷப்பட்டாங்க. அங்கே வெள்ளைக்கார பொண்ணு கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சு இருக்காங்க. அந்த தகுதி எனக்கு இல்லைனு அவங்களுக்கு தெரியலை. நான் டைரக்ஷன் பண்ணப்போறேன்னு சொன்னவுடன், உனக்கு முடி கொட்டிவிடுமேனு சொன்னாங்க. அதனால், நான் இப்ப நடிக்க வந்திட்டேன். என் முதல் படத்தில் இருந்தே ரசிகர்கள் ஆதரவு கொடுக்காங்க. ரசிகர்களை 3 ஆண்டுகளாக கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இந்த தடவை ரசிகர்கள் என்ஜாய் பண்ணுற மாதிரி படம் பண்ணியிருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.