குடும்பப் பெயர் என் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது ; நடிகை லட்சுமி மஞ்சு ஓப்பன் டாக்
தெலுங்கு திரையுலகின் பிரபல சீனியர் நடிகரான மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. இவர் பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரது சகோதரர்கள் விஷ்ணு மஞ்சு மற்றும் மஞ்சு மனோஜ் இருவரும் நடிகர்களாகப் பயணித்து வருகின்றனர். இவர்களது குடும்பப் பேரான 'மஞ்சு' என்பதே இவர்களது அடையாளமாக மாறிவிட்டது. அதே சமயம் இந்த 'மஞ்சு' என்கிற குடும்பப் பெயர் இல்லாமல் இருந்திருந்தால் நான் இன்னும் எனது திரைப்பயணத்தில் கூடுதலான உயரங்களைத் தொட்டிருக்க முடியும் என்று சமீபத்திய நிகழ்வு ஒன்றில் வெளிப்படையாகவே மனம் திறந்து பேசியுள்ளார் லட்சுமி மஞ்சு.
இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, இந்த குடும்பப் பெயர் எனக்கு இருமுனை கூரான ஒரு கத்தி போலத்தான் இருந்திருக்கிறது. எனது குடும்பம் மிகவும் ஆணாதிக்க சூழல் கொண்டது; நான் எதை சாதிக்க விரும்பினாலும் அதற்கான கடுமையான போராட்டங்களைச் சந்திக்க நேரிட்டது. எனது குடும்பத்தினரிடமிருந்து அதற்கு ஆரம்பத்தில் தயக்கமும் சந்தேகமும் மட்டுமே வெளிப்பட்டது. இத்தனைக்கும் இந்த குடும்பத்திலிருந்து 'மஞ்சு' என்கிற குடும்பப் பெயரை முதன் முதலில் பயன்படுத்தியது நான் தான், அதன் பிறகுதான் எனது சகோதரர்கள் பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்றும் கூறியுள்ளார் லட்சுமி மஞ்சு.